பெலராஸை சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞரான அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல், உக்ரைனிய மனித உரிமை அமைப்பான சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டிஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.


 






அரசியல் கைதியான அலெஸ் பியாலியாட்ஸ்கி தற்போது சிறையில் உள்ளார். பெலராஸ் நாட்டின் எதிர்கட்சி தலைவரான  பாவெல் லதுஷ்கோ இதுகுறித்து பேசுகையில், "இது அவருக்கு மட்டுமல்ல. இப்போது பெலாரஸில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்குமானது. இது நம் அனைவரையும் போராடத் தூண்டுகிறது. 


(அலெக்சாண்டர்) லுகாஷெங்கோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.


2022ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.


ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் நிறுவனத்தில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போரை தடுத்து மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆர்வலர்கள் மற்றும் குழுவிற்கு அந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பத்திரிக்கையாளர்களான ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி முராடோவ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா ஆகியோர் அமைதிக்கான நோபல் விருதை பெற்றிருந்தனர். 


ஜனநாயகம் மற்றும் அமைதியை நிலைநாட்ட முக்கிய பங்கு வகிக்கும் கருத்து சுதந்திரத்தை காக்க முயற்சிகளை எடுத்ததற்காக அவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர்.


கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார்.


அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.


இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.