ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ (Nihon Hidankyo) என்ற இயக்கத்திற்கு இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டில் தப்பி பிழைத்தவர்கள் இணைந்து நடத்தி வரும் அமைப்பே நிஹான் ஹிடாங்கியோ ஆகும்.
அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக இந்த இயக்கத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு:
நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், அமைதியை நிலைநாட்டுதல் ஆகிய காரணங்களுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை எதிர்த்து போராடிய மனித உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு கடந்தாண்டு (2023ஆம் ஆண்டு) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் தூதரக உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அசாதாரண முயற்சிகளை எடுத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (2002); குழந்தை கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்வலர் மலாலா (2014 பகிரப்பட்டது); ஐரோப்பிய ஒன்றியம் (2012); ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (2001 பகிரப்பட்டது ); மற்றும் புனித தெரசா (1979) ஆகியோரும் அடங்குவர். கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!