ஆப்ரிக்காவின் மடகாஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பயணித்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பிரசவித்து அதை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்றார். அந்தப் பெண்ணை கண்டுபிடித்த போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.


இங்கே நம்மூரில் தான் இதுபோன்ற குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசும் சம்பங்கள் நடைபெறுகிறது என நினைக்க வேண்டாம்.


வேண்டாத குழந்தைகளுக்கு ஒரே விதி தான் என்பது போல் இப்படியான சம்பவங்கள் உலகம் முழுவதுமே நடக்கின்றன. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி மடகாஸ்கர் நாட்டிலிருந்து மொரீசியசுக்கு ஒரு விமானம் சென்றது. அதில், 20 வயதான மடகாஸ்கர் பெண்மணி ஏறினார். அவர் மொரிசீயல் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார். விமானப் பயணத்தில் எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பயணம் முடிந்த பின்னர் சிப்பந்திகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. உடனடியாக சிப்பந்திகள் அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


அடுத்ததாக கழிவறையில் பிரசவித்தது யார் என்ற தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் மடகாஸ்கர் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவருக்கு அண்மையில் பிரசவமானது உறுதியானது. இப்போது குழந்தையும், தாயும் உடல் நலன் சீராக இருப்பதாகத் தெரிகிறது.


இப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் பிரேசிலின் ரொன்டோனியா நகரில் இறந்ததாக நினைத்து இறுதிச் சடங்கு செய்யப்படவிருந்த குழந்தை உயிருடன் இருப்பது இறுதி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை. 18 வயதே நிரம்பிய அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.


அந்தப் பெண் திடீர் பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தையைப் பெற்றுள்ளார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தான் அந்தக் குழந்தை 5 மாதங்களில் குறைப் பிரசவமாகப் பிறந்தது தெரிந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்களும் கூறி அனுப்பிவிட இறுதிச் சடங்குக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அப்போது குழந்தையை தயார் செய்த போது தான் குழந்தைக்கு இதயத் துடிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தக் குழந்தையின் தற்போதைய நிலை தெளிவாகத் தெரியவில்லை. உலகம் முழுவதுமே பச்சிளங் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற தேவையற்ற கர்ப்பம்தான் காரணமாக இருக்கின்றது. கலாச்சார  சில நாடுகளில் டீன் செக்ஸ் குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை. அப்படியான நாடுகளில் இதுபோன்ற குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாவது அதிகமாக இருக்கிறது.