அமெரிக்க பெண் ஒருவர் ஜிம்மிற்குள் நுழைந்த நபரால் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஜிம்முக்குள் தாக்குதல்


ஃபிட்னஸ் மாடலாகவும், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சராகவும் இருக்கும் அந்தப் பெண், தாக்குதல் நடத்தியவரைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடுவதை வீடியோ பதிவுகள் காட்டுகின்றன. இந்த விடியோ வைரலான நிலையில் இணையம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். 24 வயதான நஷாலி அல்மா, ஜனவரி 22 அன்று, தம்பாவில் உள்ள இன்வுட் பார்க் அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, சேவியர் தாமஸ்-ஜோன்ஸ் என்பவரால் தாக்கப்பட்டார் என்று ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.



தைரியமாக தற்காத்துக்கொண்ட பெண்


நஷாலி பயத்தில் பதறாமல் தாக்குதல் நடத்தியவரிடமிருந்து தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொண்டார், இதன் விளைவாக குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட வீடியோவின் படி, நஷாலி முதலில் ஒருவர் ஜிம்மிற்குள் நுழைய முயல்வதைக் கதவு வழியாகக் கவனித்துள்ளார், ஒர்க் அவுட் செய்ய வந்தவர் என்று நினைத்து அவருக்கு கதவை திறந்து விட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: வழுக்கைதான் பிரச்சனை.. வேலையை விட்டு தூக்கிய மேனேஜர்.. வழக்கு தொடுத்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த பம்பர் ஆஃபர்!


துணிச்சலை கண்டு கைவிட்ட குற்றவாளி


கதவைத் திறந்து விட்ட உடன் தனது வொர்க்-அவுட்டைச் செய்ய சென்றுள்ளார், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, குற்றவாளியான சேவியர் தாமஸ்-ஜோன்ஸ் அவரை நெருங்கி பிடிக்க முயற்சி செய்தார். அவர் நஷாலியை தரையில் சாய்த்து தாக்க முயற்சிக்கிறார், ஆனால் நஷாலி தொடர்ந்து போராடுகிறார். சிறிது நேர சண்டைக்குப் பிறகு, அவரது துணிச்சலைக் கண்டு தாக்கியவர் இறுதியாக கைவிட்டுவிட்டார்.






இன்ஸ்டாகிராம் பதிவு


"அவர் என்னை நெருங்கி வந்தவுடனே, நான் அவரைத் தள்ளினேன். 'என்ன செய்கிறாய்? தள்ளிப்போ' என்றேன். 'என்னைத் தொட முயற்சிப்பதை நிறுத்துங்கள்' என்றேன். அதன்பிறகும் அவர் என்னை சுற்றி துரத்தத் தொடங்கினார்" என்று 24 வயதான நஷாலி அல்மா, ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் கூறினார். "எனது அறிவுரை என்னவென்றால், ஒருபோதும் கைவிடக்கூடாது, என் பெற்றோர்கள் வாழ்க்கையில் என்னிடம் சொன்னது அதுதான், எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்றுதான் கூறுவார்கள், நான் அவருடன் சண்டையிடும் போது அதை நான் மனதில் வைத்திருந்தேன்" என்று நஷாலி கூறினார்.


நஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டு உள்ளார். மேலும் இவரால் பலர் ஊக்குவிக்கப்பட்டு ஜிம்முக்கு செல்வதாக கூறுகிறார்.