உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் விதமாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பது, வெளியிடுவது முதலானவற்றிற்குத் தற்காலிகமாகத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. 


தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புதிதாக 4 ஒரிஜினல் படைப்புகளை ரஷ்யா நாட்டில் இருந்து தயாரித்து வருகிறது. தாஷா ஷூக் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் சீரிஸ் ஒன்று சமீபத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 1990களின் நடைபெறும் திரைக்கதையாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், ரஷ்யாவில் உருவாக்கப்பட்டிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஒரிஜினல் தயாரிப்பு ஆகும். கடந்த ஆண்டும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் `அன்னா கே’ என்ற சீரிஸைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமானவர்களின் தரப்பில், தற்போது உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டிருக்கும் போர் சூழல் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 



கடந்த பிப்ரவரி 28 அன்று, வால்ட் டிஸ்னி நிறுவனம் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்புகளில் உருவாக்கப்படும் எந்தத் திரைப்படமும் தற்போதைய சூழலில் ரஷ்யாவில் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த, `டர்னிங் ரெட்’ என்ற பிக்சார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் வெளியிடப்படாது எனக் கூறப்பட்டிருந்தது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் `தி பேட்மேன்’ திரைப்படம் வெளியாகாது என அறிவித்ததோடு, அதன் வெளியீட்டையும் நிறுத்தியுள்ளது. 


மேலும், உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்கள், விருது விழாக்கள் முதலானவற்றில் இருந்து ரஷ்யா விலக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 அன்று அறிவிப்புகளை வெளியிட்ட கான் திரைப்பட விழா குழுவினர், இந்த ஆண்டு ரஷ்யாவின் அரசோடு தொடர்புடைய பிரதிநிதிகள், பங்கேற்பாளர்கள் யாரையும் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும், சீரிஸ் மேனியா திரைப்பட விழா, மிப் டிவி விழா முதலான விழா குழுவினரும் தங்கள் நிகழ்ச்சிகளில் ரஷ்யப் பிரதிநிதிகளை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடு ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதைக் காரணமாகச் சுட்டிக்காட்டி இந்த திரைப்பட விழாக்களில் ரஷ்யா மீதான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. 



ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெறும் கிளாஸ்கோ திரைப்பட விழாவும் இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு, இந்த ஆண்டு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட, இயக்குநர் கிரில் சொகொலோவின் `நோ லுகிங் பேக்’ திரைப்படத்தையும், இயக்குநர் லேடோ க்வாடனியாவின் `தி எக்சிக்யூஷன்’ திரைப்படத்தையும் திரையிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளது.