காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், காசாவில் பஞ்சம் நிலவுவதாக நேற்று ஐ.நா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இதை மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா சபையின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
“இது ஒரு நவீன ரத்த அவதூறு“
ஐ.நா சபையின் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், காசாவில் பஞ்சம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை நிராகரித்து, அதை "முற்றிலும் பொய்" மற்றும் "நவீன இரத்த அவதூறு" என்று கூறியுள்ளது.
யூதர்கள் கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தை மதச் சடங்குகளுக்குப் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டே ரத்த அவதூறு ஆகும். இது இடைக்காலம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
உணவுப் பாதுகாப்பு பகுப்பாய்வு மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்காக ஐ.நா.வால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு(IPC), ஒரு அறிக்கையில், காசாவில் அரை மில்லியன் மக்கள் பஞ்சத்தில் சிக்கியுள்ளதாகக் கூறியது. செப்டம்பர் மாத இறுதிக்குள், 6,40,000 க்கும் மேற்பட்ட மக்கள் "பேரழிவு" அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள், இது IPC கட்டம் 5 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, பசியால் 281 பேர் இறந்துள்ளனர், அவர்களில் 114 பேர் குழந்தைகள்.
“ஹமாஸ் திட்டமிட்டு பட்டினி பிரசாரம் செய்கிறது“
இந்நிலையில், நெதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேலுக்கு பட்டினியை ஆதரிக்கும் கொள்கை இல்லை. இஸ்ரேல் பட்டினியைத் தடுக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. காசாவில் வேண்டுமென்றே பட்டினி கிடப்பது இஸ்ரேலிய பணயக்கைதிகள் மட்டுமே. இது ஒரு நவீன ரத்த அவதூறு, பாரபட்சம் மூலம் காட்டுத்தீ போல் பரவுகிறது" என்று தெரிவித்துள்ளார். "ஹமாஸின் திட்டமிட்ட "பட்டினி பிரசாரம்" இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதிலிருந்தும் ஹமாஸை ஒழிப்பதிலிருந்தும் தடுக்காது" என்று மேலும் கூறினார்.
மறுபுறம், அவர் ஐ.நா. தரவை மேற்கோள் காட்டியுள்ளார். அதன்படி, ஜூலை மாதத்தில், "சேகரிக்கப்பட்ட 1,012 உணவுப் பொருட்களை கொண்டுவரும் உதவி லாரிகளில், 10 மட்டுமே கிடங்குகளை அடைந்தன; மீதமுள்ளவை விநியோகிக்கப்படுவதற்கு முன்பே கொள்ளையடிக்கப்பட்டன." என்று கூறியுள்ளார்.
காசாவில் உதவிக்கு "தற்காலிக பற்றாக்குறை" இருந்தபோதிலும், இஸ்ரேல் அதை "வான்வழி, கடல்வழி விநியோகங்கள், பாதுகாப்பான போக்குவரத்து வழிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் GHF விநியோக மையங்கள் மூலம்" சமாளித்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மார்ச் மாதத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் விதித்த 11 வார உதவித் தடையைப் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.