UN Israel PM: ஐநா., பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு காலி சேர்களுக்கு மத்தியில் உரையாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continues below advertisement

உறுப்பினர்கள் வெளிநடப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின், பொதுச் சபையில் உரையாற்ற முயன்றபோது பெரும்பாலான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை கண்டதும் நேதன்யாகுவின் முகம் கடுகடுத்ததை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. ஆங்காங்கே ஒரு சில ஆதரவு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே நேதன்யாகுவின் உரையை கேட்க அமர்திருந்தனர். ஆனாலும், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காட்சியளித்தன. இது சர்வதேச அளவில் அவருக்கு நிலவும் எதிர்ப்பை உணர்த்துகின்றன.

காலி சேர்களிடம் உரையாற்றிய நேதன்யாகு

உலக நாடுகளின் பெரும்பாலானவற்றின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்,  காசா மீதான பேரழிவுகரமான போரைத் தொடர அவர் சபதம் செய்தபோது, ​​அவருக்கு எதிர்ப்பும் கைதட்டலும் கலந்த வரவேற்பு கிடைத்தது. 

காஸாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் தனது உரையயை கேட்கும் வகையில், அங்கு ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்படுவதாக விளக்கினார். இஸ்ரேலின் உளவுத்துறை சேவைகளால் ஹேக் செய்யப்பட்டு, காசாவில் உள்ள மக்களின் செல்போன்கள் மூலம் தனது உரை ஒளிபரப்பப்படுவதாகவும் நேதன்யாகு குறிப்பிட்டார்.

ஐநாவில் நேதன்யாகுவின் ஆணவப் பேச்சு

இஸ்ரேல் பணயக்கைதிகள் குறித்து பேசுகையில், "நாங்கள் உங்களை மறக்கவில்லை, ஒரு நொடி கூட இல்லை. இஸ்ரேல் மக்கள் உங்களுடன் இருக்கிறது. ஹமாஸ் குழுவினரே உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள். என் மக்களைப் போக விடுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால் உயிருடன் இருப்பீர்கள். நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.  மேற்கத்திய தலைவர்கள் அழுத்தத்திற்கு அடிபணிந்திருக்கலாம். ஆனால் இஸ்ரேல் அடிபணியாது. பாலஸ்தீன அரசை சில நாடுகள் அங்கீகரித்து இருப்பது அவமானகரமானது. இந்த நடவடிக்கை யூதர்களுக்கும் எல்லா இடங்களிலும் உள்ள அப்பாவி மக்களுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். மற்ற நாடுகளின் சார்பாக இஸ்ரேல் தீவிர இஸ்லாத்தை எதிர்த்துப் போராடுகிறது. உங்களுக்கு ஆழமாகத் தெரியும், இஸ்ரேல் உங்கள் சண்டையை எதிர்த்துப் போராடுகிறது" என நேதன்யாகு உரையாற்றினார்.

பின்வாங்கும் ட்ரம்ப்:

இதனிடையே இஸ்ரேல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இஸ்ரேல் மேற்குக் கரையை இணைக்க நான் அனுமதிக்க மாட்டேன். இல்லை, நான் அதை அனுமதிக்க மாட்டேன். அது நடக்கப்போவதில்லை. போதுமான அளவுக்கு நடந்துவிட்டது. இப்போது நிறுத்த வேண்டிய நேரம் இது" என்று தனது முடிவை அறிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா, இந்தியா - பாகிஸ்தான் என பல போர்களை நிறுத்துவதில் ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மட்டும் ஆதரவாகவே செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான், இந்த மோதலை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. போரை கைவிட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.