இந்தியாவின் அண்டை நாடான நேபாலில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர். இதையடுத்து, அந்நாட்டில் புரட்சி வெடித்து பெரும் களவரம் மூண்டது. ஆட்சியாளர்களின் வீடுகள், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரம் ஒருபுறம் நடக்க, அந்நாட்டு சிறைகளிலிருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக வலைதளங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வு
நேபாளில், சர்மா ஒலி பிரதமராக ஆட்சிபுரிந்துவந்த நிலையில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் அந்நாட்டு அமைச்சர்கள், ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகள் எந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
சமூக ஊடகங்களை முடக்க முயன்ற நேபாள அரசு
இதனால், நேபாள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, பதிவு செய்யப்படாத சமூக வலைதளங்களை கடந்த 4-ம் தேதியன்று நள்ளிரவு முதல் தடை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இது இளம் தலைமுறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கடந்த 8-ம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் கூட, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் நடத்திய அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு நடத்தியும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ராணுவம் குவிக்கப்பட்டு, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ததோடு, சமூக வலைதளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும், போராட்டக்காரர்கள் விடவில்லை. சமூக வலைதளங்கள் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
ராஜினாமா செய்த பிரதமர், ஜனாதிபதி
இதனால் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார். மறுபுறம், நாடாளுமன்றம், பிரதமர் வீடு, ஜனாதிபதி அலுவலகம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் களமிறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் வசம் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
சிறைகளில் இருந்து தப்பிய 15,000 கைதிகள்
இந்த கலவரங்களுக்கு இடையே, நேபாளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தப்பிக்கும்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும், தப்பியோடிய கைதிகளில் ஒருசிலரை மட்டுமே காவல்துறையினர் மீண்டும் பிடித்துள்ளதாகவும், சிலர் தாங்களாகவே சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, தலைமறைவாகியுள்ள கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கிறது.
கலவரத்தை பயன்படுத்தி 15,000 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.