இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த கட்டிடத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா என்ன செய்ததோ, அதையேதான் நாங்களும் செய்தோம் எனக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து தாக்குதல்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸிற்கும் இடையே நடந்து வரும் போரில், இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,000-த்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், ஐ.நா, இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா உட்பட பலரும் போரை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில், கத்தாரின் தலைமையில், ஹமாஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது, இஸ்ரேல் போர் விமானங்கள், பேச்சுவார்த்தை நடைபெற்ற அலுவலகத்தின் மீது குண்டு மழை பொழிந்தன. இதில், கத்தார் அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட நியில், ஹமாஸ் தலைவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது சர்வதேச போர் விதிமீறல் என கத்தார் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் சந்தோஷமடையவில்லை என அமெரிக்காவும் தெரிவித்தது.
“அமெரிக்கா செய்ததைத்தான் நாங்களும் செய்தோம்“
இந்த சூழலில், இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தீவிரவாதிகளுக்கு கத்தார் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும், அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும், அல்லது நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்படி செய்யாவிட்டால், நாங்கள் செய்வோம் என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், 2011-ம் ஆண்டு செப்டம்பர் 11(9/11) அன்று அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு அமெரிக்கா எப்படி எதிர்வினை ஆற்றியதோ, அதையேதான் நாங்களும் செய்துள்ளோம் என நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல் 9/11 தாக்குதலுக்கு ஈடானது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தீவிரவாதிகளை தேடிச் சென்று தாக்கியது. குறிப்பாக, பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனை கொன்றது. அப்போது, அவர்களை யாரும் எதுவும் சொல்லவில்லை, மாறாக, உலக நாடுகள் அமெரிக்காவை பாராட்டின.
அமெரிக்கா அப்போது செய்ததைத்தான் நாங்கள் இப்போது சரியாக செய்திருக்கிறோம். ஆனால், எங்கள் மீது கண்டனங்கள் எழுகின்றன. எங்களையும் உலக நாடுகள் பாராட்ட வேண்டும் என்று நெதன்யாகு கேட்டுக் கொண்டுள்ளார்.