ஸ்காட்லாந்தில் உள்ள 60% மேல்நிலைப் பள்ளிகள் பால் புதுமையினர் சேர்க்கையை ஆதரிக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். LGBT யூத் ஸ்காட்லாந்தால் உருவாக்கப்பட்ட, இந்த சாசனம் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டுள்ளது.
LGBT சமூகம்:
2022ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அரசு தரப்பில் பாலின திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பால் புதுமையினரை (LGBT) தனி சமூகமாக அடையாளப்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பத்திரிக்கையின் தரவுகளின்படி மொத்தம் இருக்கும் 357 மேல்நிலைப் பள்ளிகளில் 212 மேல்நிலைப் பள்ளிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும், 40 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 21 கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் புதுமையினர் திட்டம் என்பது பள்ளிகளில் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் பால் புதுமையின நபர்களை சேர்க்க உதவும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஊழியர்களைப் பாதுகாத்தல் மற்றும் வாடிக்கையாளர்கள், மாணவர்கள் அல்லது சேவைப் பயனர்களுக்கு உயர்தர சேவையை வழங்குதல் ஆகும். தற்போது 60 சதவீத பள்ளிகள் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில் விரைவில் 75 சதவீத பள்ளிகள் இந்த திட்டத்தை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாக கூறியுள்ளனர்.
சமத்துவம்:
LGBT யூத் ஸ்காட்லாந்தின் கூட்டாண்மைத் தலைவர் அலி கெர், கூறுகையில்: " இது இளைஞர்களுக்கான காலம், பால் புதுமையினர் மற்றும் பால் புதுமையினர் அல்லாதவர்கள் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் சமமாக நடத்தப்படுவது ஆகும். மேலும் பால் புதுமையினரை ஆதரிக்கும் ஒரு பாதுகாப்பான மையமாக பள்ளிகள் திகழ்வதாக ” கூறியுள்ளார். "கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மேல்நிலைப் பள்ளிகள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளது, வரவேற்கத்தக்கது. ஆனால் அனைத்து பள்ளிகளும் முன்வந்து இந்த பால் புதுமையினர் சமூகத்தை ஆதரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 2022 இல், பாராளுமன்றத்தில் பாலின அங்கீகார சீர்திருத்த சட்ட மசோதாவை ஸ்காட்லாந்து நிறைவேற்றியது, இந்த மசோதா மூலம் பால் புதுமையினர் தனித்து அடையாளம் காட்ட அனுமதிக்கும். இருப்பினும், ஜனவரி மாதம் இங்கிலாந்து அரசாங்கம் இந்த சட்டத்தை முடக்கியது, இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. எவ்வாறாயினும், ஸ்காட்டிஷ் அரசாங்கம் அதன் பாலின சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் சட்டரீதியான செயல்களை தொடங்கியது.