அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று தேசிய லிப்ஸ்டிக் தினம்,..என்னது? லிப்ஸ்டிக்குக்கு எல்லாம் தினமா? உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா என யோசிப்பவர்களுக்கு... இந்த லிப்ஸ்டிக்கு தினத்துக்குப் பின்னணியில் ஒரு குட்டி அரசியல் இருக்கிறது தெரியுமா?..
அமெரிக்க ஒப்பனை கலைஞர் ஹுடா கட்டன்தான் இன்றைய லிப்ஸ்டிக் தினத்தின் நவீன கால நிறுவனராக அங்கீகரிக்கப்படுகிறார்.
பண்டைய சுமேரியர்கள் மற்றும் சிந்து சமவெளியில் வசிப்பவர்கள்தான் உதட்டுச்சாயம் பற்றி முதன்முதலில் ஆராய்ந்தனர். அவர்கள் முகம் மற்றும் உதடுகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நொறுக்கப்பட்ட ரத்தினக் கற்களைப் பயன்படுத்தினர்.
இருப்பினும், தேன் மெழுகுடன் செய்யப்பட்ட உதட்டுச்சாயங்களின் முதன்முதலில் 1,000 ஆண்டுகளுக்கு முன்புதான் செய்யப்பட்டது. இவை 19 ஆம் நூற்றாண்டில் பெரும் புகழ் பெற்றன.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் வணிக உதட்டுச்சாயம், மான் கட்டை, தேன் மெழுகு மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
ஒரு பெண்ணின் முக அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, உதட்டுச்சாயங்கள் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும். சில லிப்ஸ்டிக் ஃபார்முலாக்கள் உங்கள் உதடுகளை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. ஒரு பிரகாசமான, தைரியமான, மற்றும் பெரிதும் பளிச் என இல்லாத உதட்டுச் சாயமும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும், MAC, Estee Lauder மற்றும் L'Oreal போன்ற பிரபலமான பிராண்டுகளின் லிப்ஸ்டிக் தயாரிப்புகளின் விற்பனையின் ஒரு பகுதி மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு செல்கிறது.
நியூயார்க் நகரத்தில் ஓட்டுரிமை கோரி 1912ல் நடந்த சஃப்ராகெட் பேரணியின் போது , சார்லோட் பெர்கின்ஸ் கில்மேன் மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் போன்ற ஆரம்பகால பெண்ணியவாதிகள் தங்கள் உதடுகளில் விடுதலையின் அடையாளமாக லிப்ஸ்டிக் பூசிக் கொண்டனர். வேதியியலாளர் ஹேசல் பிஷப் இரண்டாம் உலகப் போரின் போது தோல் மருத்துவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, எளிதில் அழிந்து போகாத உதட்டுச்சாயம் செய்யும் செயல்முறையை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் ஆவார்.
உண்மையில்,பெண்களின் மன உறுதியை அதிகரிக்கவே இரண்டாம் உலகப் போரின் போது லிப்ஸ்டிக் உற்பத்தியை வின்ஸ்டன் சர்ச்சில் தொடர்ந்தார் என்கிற செய்தியும் உண்டு. லிப்ஸ்டிக்குக் பின்னணியில் இத்தனை அரசியலா என வாய்பிளக்கிறீர்களா? அப்படியே அதே அழகான உதட்டில் உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக் பூசி இன்ஸ்டாவில் ஒரு செல்ஃபி போடுங்க...