நாசாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களாலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தீப்வாளி கொண்டாடப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்கள் பங்கேற்று தீபாவளியை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி, சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,” நான் விண்வெளி வீராங்கனை சினிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்க வெள்ளை மாளிகை, மற்றும் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
பூமியில் இருந்து 260 மைல் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தில் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு எனக்கு இந்தாண்டு கிடைத்திருக்கிறது. இந்த நாளில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்த என் அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்கள் குடும்பத்தினருக்கு தீபாவளி குறித்தும், பிற இந்திய பண்டிகைகளைப் பற்றியும் பேசியுள்ளார். கற்றுக்கொடுத்துள்ளார்.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவுத்துள்ளார்.
” நல்ல விஷயங்கள் நிலைத்திருக்கும் சூழலில், தீபாவளி மகிழ்ச்சிக்கானதொரு கொண்டாட்டம். பல்வேறு கலாச்சார, பண்பாடு பின்பற்றிய சூழலில் வளர்ந்ததை நினைத்து பெருமையடைகிறேன். எனது பெற்றோர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தவும் ஸ்டார்கள் இருக்கும் உயரத்தை அடையவும் எப்போதும் ஊக்கமளித்து கொண்டே இருந்தனர். இந்த சிறப்பான தருணத்தை கொண்டாடிய அதிபர், துணை அதிபர் ஆகியோருக்கும் நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதத்தில் நாசாவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விண்கலன் செயல்பாடுகளை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இவர் விண்வெளியில் இருந்தபடியே வாக்களிக்க உள்ளார்.