விண்வெளி வீரர்களை விண்ணில் நாம் அறிந்திராத இடங்களுக்கு அனுப்பி, பல்வேறு அறிவியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நாசா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக முக்கிய தேவையாக இருக்கும் உணவை எப்படி அவர்களுக்கு அளிப்பது என்பதில் குழம்பி நிற்கிறது நாசா. 


நாசா அமைப்பும் கனடா ஸ்பேஸ் ஏஜென்சி அமைப்பும் இணைந்து மக்களிடம் `ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்’ என்பதை அறிவித்து, அதன் மூலம் மிகக் குறைந்த அளவிலான வளங்களைப் பயன்படுத்தி எளிதாக உணவு தயாரிப்பதையும், குறைவான கழிவுகளை உருவாக்குவதையும் மக்கள் சிந்தித்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. 


உணவு என்பது நீண்ட காலம் சேமிக்கப்பட்டால் அதில் உள்ள சத்துகள் இழக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளிப் பயணம் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்பதால், விண்வெளி வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவது உகந்தது அல்ல. 



இதனால், ஆய்வாளர்கள் உணவுக்கான பல்வேறு மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை `ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்’ மூலமாக மக்களிடமும், சமூக ரீதியாக வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர் காலங்களைச் சமாளிக்க உணவுக்கான புதிய தொழில்நுட்பத்தையும் உருவாக்க முயன்று வருகின்றனர். 


ஆழ் விண்வெளி உணவு சேலஞ்சில் பங்குபெறுவோரிடம் உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் ஒன்றைப் புதிதாக உருவாக்கி, சுமார் 3 ஆண்டுகளுக்கு ஆழ் விண்வெளியில் நான்கு வீரர்களுக்குப் பயன்படுத்துமாறு உருவாக வேண்டும். இதில் பங்குபெறுபவர் உணவைப் பாதுகாப்பது, தயாரிப்பது, வீரர்களுக்கு அளிப்பது முதலான அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்தத் தொழில்நுட்பத்தைத் தயாரிக்க வேண்டும். இது தயாரிப்பு, உணவை எடுத்துச் செல்லுதல், உணவை உண்ணுதல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சேலஞ்ச் எனக் கூறப்பட்டுள்ளது. 


நாசா அமைப்பின் விண்வெளி தொழில்நுட்பத் திட்ட இயக்குநரகத்தின் துணை நிர்வாகியான ஜிம் ராய்ட்டர் சமீபத்தில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், `விண்வெளி வீரர்களுக்கு நீண்ட கால விண்வெளிப் பயணத்தின் போது உணவு வழங்குவதற்குப் புதுமையான தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். உணவு தொழில்நுட்பத்தின் எல்லையை விரிவடைய செய்வதன் மூலம், எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் வீரர்களை ஆரோக்கியமாகவும், பூமியில் வாழும் மக்களுக்கும் உணவு வழங்குவதை உறுதிப்படுத்த முடியும்’ எனக் கூறியுள்ளார்.



ஆழ் விண்வெளி உணவு சேலஞ்சின் முதல் கட்டம் கடந்த அக்டோபர் மாதம் முடிவை எட்டியுள்ளது. புதுமையான உணவு உற்பத்தி தயாரிப்பை மேற்கொள்வதற்கான திட்டங்களை வழங்கிய 18 அணிகளுக்கு நிதியுதவியாக சுமார் 450 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது நாசா அமைப்பு. 


நாசா, CSA ஆகிய அமைப்புகளால் சர்வதேச அளவில் 10 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, CSA அமைப்பு ஒவ்வொரு அணிக்கு சுமார் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. 


இந்நிலையில் நாசா அமைப்பு தற்போது புதிய அணிகளையும், பழைய அணிகளையும் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கு அழைத்துள்ளது. இதில் உணவு தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும், அதன் தயாரிப்பு வடிவமைப்பைப் பரிசோதனைக்கு அளிக்க வேண்டும். இரண்டாம் கட்டப் போட்டிகளில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.