வியட்நாம் போரின் `நாபாம் சிறுமி’ எனப் பரவலாக அழைக்கப்படும் கிம் ஃபுக் தனது இறுதி சரும சிகிச்சையை எடுத்துக் கொண்டார். கடந்த 1972ஆம் ஆண்டு, வியட்நாம் போரின் போது, `நாபாம் சிறுமி’ என்ற பிரபலமான படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் நிக் யுட் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். வியட்நாம் கிராமம் ஒன்றில் நாபாம் வெடிகுண்டு வீசப்பட்ட போது, அதில் இருந்து தீக்காயங்களோடு நிர்வாணமாக கிம் ஃபுக் ஓடி வரும் புகைப்படம் மிகப் பிரபலமானது. மேலும், வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரையும், போரின் கொடூரங்களையும் விளக்கும் சின்னமாகவும் `நாபாம் சிறுமி’ படம் பேசப்படுகிறது. தற்போது 59 வயதான கிம் ஃபுக் அமெரிக்காவின் மியாமி டெர்மடாலஜி மற்றும் லேசர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தனது சருமத்திற்கான இறுதிகட்ட சிகிச்சையை எடுத்து வருவதாக, அவரை 50 ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படம் எடுத்த நிக் யுட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளரான நிக் யுட், கடந்த 1972ஆம் ஆண்டு அவர் எடுத்த படத்தையும், தற்போது சிகிச்சையின் போது மருத்துவமனையில் இருக்கும் கிம் ஃபுக்கின் படத்தையும் இணைத்துப் பகிர்ந்துள்ளார். மேலும், கிம் ஃபுக்கின் இறுதிகட்ட சரும சிகிச்சை மிகவும் உணர்வுப்பூர்வமானவ்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது பதிவில் நிக் யுட், `வியட்நாம் போரின் காலத்தில் எடுக்கப்பட்ட படத்தில் வரும் `நாபாம் சிறுமி’ 50 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு ஃப்ளோரிடாவில் தீக்காயங்களில் சிறப்பு நிபுணரான உலகப் பிரபலம் பெற்ற மருத்துவர்களிடம் தனது இறுதிகட்ட லேசர் சிகிச்சையைப் பெற்று வருகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட படத்தில் மட்டுமே அவர் `நாபாம் சிறுமி’ எனவும், தற்போது அவர் கிம் ஃபுக் எனவும் கூறியுள்ளார். தனது சருமத்திற்கான இறுதிகட்ட லேசர் சிகிச்சைக்காக மியாமி வந்துள்ளார் கிம் ஃபுக். மேலும், இந்த நிகழ்வின் 50வது ஆண்டு கடந்திருக்கும் போது, அவரது சிகிச்சை முடிவடைந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய கிம் ஃபுக், `ஜூன் 8, 1972. என்னால் மறக்கவே முடியாது. நான் விமானம் ஒன்றைப் பார்த்தேன்.. நான்கு குண்டுகள் அதில் இருந்து விழுந்தன. அப்போது திடீரென சத்தம் கேட்க, என்னைச் சுற்றி எல்லா இடங்களிலும் நெருப்பு மட்டுமே இருந்தது’ எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க விமானப் படை நாபாம் வெடிகுண்டை வீசிய போது, கிம் ஃபுக்கிற்கு 9 வயது. சுமார் 65 சதவிகிதம் தனது உடலைத் தீக்காயங்களுக்கு இழந்தார் 9 வயதான கிம் ஃபுக். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் ஜில் வைபெலைச் சந்தித்துள்ளார் கிம் ஃபுக். இதுவரை 12 லேசர் சிகிச்சைகளைப் பெற்றுள்ள கிம் ஃபுக், தற்போது எந்த வலியும் இல்லாமல் இருப்பதாக மகிழ்ச்சி கொள்கிறார். இதுகுறித்து பேசிய அவர், `நான் இனிமேலும் போரினால் பாதிக்கப்பட்டவள் அல்ல. நான் நாபாம் சிறுமி அல்ல’ எனக் கூறியதோடு, தன்னைத் தோழியாக, உதவியாளராக, தாயாக, பாட்டியாக, அமைதியை விரும்பும் உயிர் பிழைத்த நபராக அடையாளம் காண விரும்புவதாக்வும் தெரிவித்துள்ளார்.