மத்திய மியான்மரில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியன்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் தரைமட்டமாகின. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.

மியான்மர் தலைநகர் நய்பிடாவிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சாகைங் நகரின் 16 மற்றும் 18 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிகள் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவிய பயங்கரமான வீடியோக்களில் கட்டிடங்கள் குலுங்குவதையும், மக்கள் பீதியில் தெருக்களில் ஓடுவதையும் பார்க்க முடிகிறது.

பிரபல சுற்றுலா நகரமான சியாங் மாயில் வசிக்கும் டுவாங்ஜாய் என்பவர் கூறுகையில், “பயங்கர சத்தம் கேட்டது. நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், பின்னர் என் பைஜாமாவுடன் கட்டிடத்திலிருந்து முடிந்தவரை ஓடினேன்" எனத் தெரிவித்தார்.

ஒரு பயங்கர வீடியோவில் ஒரு வானளாவிய கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் இருக்கும் நீச்சல் குளம், ஆடிக்கொண்டிருப்பதையும், குளத்திலிருந்து தண்ணீர் விழுவதையும் பார்க்க முடிகிறது.

இன்னொருவர், ஒரு தனியார் வீட்டில் உள்ள ஒரு சிறிய குளத்தில் தண்ணீர் பலமாக தெறித்து, மினி-சுனாமிகளைப் போல தோற்றமளிப்பதைக் காட்டினார்.

இன்னொரு வீடியோவில் வானளாவிய கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமாகிறது.