ரஷிய, சீன அதிபர்களை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டி தள்ளியுள்ளார். அதோடு, தற்போதைய அதிபர் பைடனை தூங்கு மூஞ்சி என கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் எடுத்த நேர்காணலில் பல முக்கிய விஷங்களை டிரம்ப் பகிர்ந்துள்ளார்.


டிரம்பை நேர்காணல் எடுத்த எலான் மஸ்க்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபரான டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல, ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார்.


அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், வயது முதிர்வு, நியாபக மறதி என பைடனுக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த புகார்கள் ஜனநாயக கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில், போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார்.


டிரம்ப்-க்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கு அனுதாபத்தை தேடி தந்தது. இதன் காரணமாக கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனால், அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் குதித்ததில் இருந்து நிலைமை மாறி வருகிறது.


பைடன், கமலா ஹாரிஸ் மீது கடும் தாக்கு: இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், டிரம்பை எக்ஸ் தளத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் நேர்காணல் எடுத்துள்ளார். அதில், உள்ளூர் அரசியல் தொடங்கி சர்வதேச அரசியல் வரை  டிரம்ப் பேசியுள்ளார்.


ரஷிய, சீன அதிபர்களை பாராட்டி தள்ளிய அவர், "விளாதிமீர் புதின்(ரஷிய அதிபர்), ஷி ஜின்பிங் (சீன அதிபர்), கிம் ஜாங் உன் (வடகொரிய அதிபர்) ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு வலிமையான அதிபர் தேவை" என்றார்.


பைடனை விமர்சித்த அவர், "எனக்கு புதினுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அவர் என்னை மதிக்கிறார். நாங்கள் உக்ரைன் விவகாரம் பற்றி பேசி இருக்கிறோம். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். உக்ரைன் மீது படையெடுக்க வேண்டாம் என அவரிடம் சொல்லி இருக்கிறேன்.


பைடன், தூங்கி கொண்டிருக்கிறார். பைடன் இருந்திருக்கவில்லை என்றால், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்திருக்காது" என்றார். அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க்-க்கு நன்றி தெரிவித்த டிரம்ப், "உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம்" என்றார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "நாட்டின் நலனுக்காக நீங்கள் வெற்றி பெறுவது மிகவும் அவசியம்" என்றார்.