மண்ணில் இருந்து எழுந்து வரும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிக்களுக்காகவே பெயர்போனது மம்மி ரிடர்ன்ஸ் வகையறா படங்கள். அது போல மம்மிக்கள் எழுந்துவரவில்லை என்றாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிக்களில் தங்க நாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.


எகிப்தில் உள்ள குவெஸ்னா கல்லறையில் தொல்பொருள் பணியின் போது தங்க நாக்குகள் கொண்ட பல மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அந்த நாட்டின் தொல்பொருள் துறை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக தொல்லியல் துறைக்கான உச்ச கவுன்சிலின் உத்தரவின் பேரில் இந்த அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. தோண்டியெடுக்கப்பட்ட மற்ற எலும்புக்கூடுகளில் சிலவற்றின் எலும்புகள் தங்கத்தில் மெருகூட்டப்பட்டுள்ளன மற்ற சில மம்மிக்கள் தங்க வடிவ ஸ்காராப்கள் மற்றும் தாமரை மலர்களுக்கு அருகில் புதைக்கப்பட்டன.


சில மம்மிகளின் உடல் நிலை சற்றே சிதிலமடைந்து நல்ல நிலையில் இல்லை என்றாலும், அதில் பொருத்தப்பட்டுள்ள தங்கப் பகுதிகள் இன்னும் அப்படியே இருப்பதாக எகிப்து இண்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது. அந்த சவப்பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட சில மர சவப்பெட்டிகள் மற்றும் செப்பு ஆணிகளும் அந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  மேலும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த மம்மிகள் உள்ள இடம் 1989ல் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் தாலமிக் மற்றும் ரோமானிய காலங்களில். அதாவது கிமு 300 மற்றும் கிபி 640 க்கு இடையில் இந்தப் பகுதி ஒரு முறை ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


2021 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் எகிப்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இடத்தில் தோண்டியபோது நாக்கு வடிவ ஆபரணத்துடன் கூடிய மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரின் மம்மிக்கள் தங்க நாக்குகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர், ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறுகின்றனர்.


எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, அடக்கம் செய்யப்பட்ட மம்மிக்களில் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள மம்மிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன, மேலும் வெவ்வேறு புதைகுழிகள் கூட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தின் பிற்பகுதியில், தாலமி காலத்திலும், ரோமானிய காலத்தில் இரண்டு கட்டங்களிலும் கல்லறை மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்பதை இது குறிக்கிறது என்று தொல்லியல் அமைச்சகம் இது தொடர்பான செய்தி அறிக்கையில் கூறியுள்ளது. ’மம்மி’ என்பது இறந்தவர்களின் உடலை ரசாயனம் கொண்டு பதப்படுத்தும் எகிப்து நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். இதில் இறந்தவர்களுடன் அவர்களுக்குப் பிடித்தமான பண்டங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பிரமீட்களில் பல அடி ஆழத்தில் புதைப்பார்க்ள்.