மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே உயிரியல் பூங்காவில் இருந்த கரடி வளையத்துக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.


உஸ்பெகிஸ்தான் நாட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் உள்ளது தாஷ்கன்ட் உயிரியல் பூங்கா. அகண்ட நிலபரப்பைக் கொண்ட இந்தப் பூங்காவில் பல்வேறு உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவிற்கு நேற்று வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது.


அப்போது கரடிகள் இருக்கும் வளையத்தின் வெளியே நின்றபடி பலரும் கரடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி நின்றிருந்தவர்கள் ஒரு தாய் அவரின் குழந்தையும் இருந்தனர். திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் குழந்தையை தூக்கு கரடி வளையத்துக்குள் வீசிவிடுகிறார். குழந்தையை வீசிவிட்டு சற்றும் சலனமே இல்லாமல் கீழே குதித்து நடையைக் கட்டுகிறார். ஆனால் அவரை பொதுமக்கள் சுற்றி வளைக்க, பூங்கா ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.


ஆனால் நல் வாய்ப்பாக கரடி குழந்தையை நெருங்கவில்லை. ஏதோ தூக்கி வீசப்படுகிறது என்ற அச்சத்தில் கரடி அங்கிருந்து விலகி ஓடிவிடுகிறது. பூங்கா ஊழியர்கள் கூட்டமாக கரடி வளையத்திற்குள் சென்று குழந்தையை தூக்கி வருகின்றனர். அது பெண் குழந்தை.






அந்தக் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த கொடூரத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செயலுக்கான பின்னணி இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் மீது கொலை முயற்சி பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.


மனநோய்களில் மிகமுற்றிய நோய் தான் ஸ்கீஸோஃப்ரீனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு காதில் ஏதோ குரல் கேட்கலாம், கண்ணில் ஏதேனும் உருவம் தென்படலாம். இப்படியான பாதிப்புக்குள்ளான பலரும் தற்கொலை, கொலை செய்திருக்கின்றனர். திடீரென நொடிப் பொழுதில் அவர்களின் காதில் கேட்கும் குரலின் உத்தரவுக்கு இணங்கி இவ்வாறு செய்வதுண்டு. குழந்தைகள் மீதான வன்முறையை நிகழ்த்தும் பலருக்கும் மனச்சிதைவு இருக்க வாய்ப்பிருப்பதாகவே மனநல மருத்துவ உலகு கூறுகிறது.