உலகில் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் சற்று பணக்காரர்களாக இருந்தால் அவர்களின் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த கொண்டாட்டங்களுக்கு வரும் நபர்களிலிருந்து அங்கு பரிமாரப்படும் உணவுகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் என அனைத்து பெரிய ஆரவாரமாக இருக்கும். இந்த வகையில் மிகவும் ஆடம்பரமாக உலகில் கொண்டாட்டப்பட்ட பார்டிகள் எவை தெரியுமா?


அபுதாபி மன்னர் சையத் அல் நயன்-சலாமா திருமணம்:




அபுதாபி நாட்டின் மன்னர் சையத் அல் நயன் மற்றும் சாலாமா தம்பதிக்கு 1981ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் பங்கேற்றனர். இதற்காக தனியாக ஒரு மைதானமே அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருமண கொண்டாட்டத்திற்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்தனர். இத்திருமணத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்யப்பட்டது. 


அட்லென்டிஸ் ஓட்டல் திறப்பு துபாய்:




துபாயில் 2008ஆம் ஆண்டு பிரம்மாண்டமான அட்லென்டிஸ் ஓட்டல் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே வந்தது. மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து என பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு அப்போது 31 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


நீத்தா அம்பானியின் 50ஆவது பிறந்தநாள்:




2013ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியிலுள்ள உமேத் பவனில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்காக 32 தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு அப்போது 30 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்யப்பட்டது. 


புரூணை சுல்தானின் 50ஆவது பிறந்தநாள்:




1966ஆம் ஆண்டு புரூணை நாட்டின் சுல்தானாக இருந்த ஹசனல் தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். விழாவில் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்து பெரிய விருந்து அளித்தார். அத்துடன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வையும் அளித்தார். இந்த விழாவிற்கு சுமார் 27.3 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்யப்பட்டது. 


பிலிப் க்ரீன் 50ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்:




பிரபல இங்கிலாந்து தொழிலதிபர் பிலிப் க்ரீன். இவர் அகார்டியா என்ற பெரிய தொழில்துறை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது 50ஆவது பிறந்தநாளை 2002ஆம் ஆண்டு கொண்டாடினார். அந்த விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பலரையு அழைத்திருந்தார். இந்த விழாவிற்கு அவர் மொத்தமாக 21 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு செய்திருந்தார். தற்போது அவரின் சொத்து மதிப்பு மட்டும் 930 மில்லியன் யூரோ ஆக உள்ளது.