மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஏற்படுத்திய சோகம் உலக நாடுகளை விட்ட இன்னும் மறையாத சூழல் உள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த ஆண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.






இப்படியான நிலையில், மொராக்கோ நாட்டில் இன்று மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 11:11 மணிக்கு  ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதில் ஏராளமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.






மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.