Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 550ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு:


ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் இறந்ததாக செவ்வாயன்று, பல்வேறு நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் குறைந்தது 60 பேர் ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புனித யாத்திரையின் கடுமையான தன்மையை வெளிபப்டுத்துகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் மெக்கா பகுதியில் தற்போது வெப்ப அலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது.  மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் திங்கட்கிழமை அன்று வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெப்ப அலை எச்சரிக்கை:


உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு கடும் வெப்ப அலை வீசுவதால்,  புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலை எதிர்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:


மெக்காவில் பல சடங்குகள் திறந்தவெளி மற்றும் கால்நடையாக செய்யப்படுகின்றன. இது பக்தர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கடும் சவால்களை உருவாக்குகின்றன. இதனை கருத்தில் க்தர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து யாத்ரீகர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. குளிபானங்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதோடு, குடை பிடித்து செல்லவும் வலியுறுத்தப்படுகின்றனர்.  இதுவரை வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த எண்ணிக்கை மற்றும் இறப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் புதுப்பிக்கப்படவில்லை.


அதிகரிக்கும் வெப்பநிலை:


கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 240 பேர் பலியாகினர். அதில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர் ஒவ்வொரு தசாப்தத்திலும் சவுதி அரேபியாவின் வெப்பநிலை 0.4 C அதிகரித்து வருவதாகவும், மோசமான வெப்பநிலையை கையாள அங்கு மேற்கொண்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன