உலகின் புத்திசாலி விலங்குகளின் ஒன்றான குரங்குகள் பல சமயங்களில் அச்சு பிசகாமல் மனிதர்களைப் போலவே தான் செயல்படுகின்றன. குறிப்பாக தாய் குரங்குகள் மனிதர்களுக்கு இணையாக தங்கள் குட்டிகளை பாதுகாத்து வல்லவையாக விளங்குகின்றன.
தங்கள் கைக்குழந்தைகளை பேணிப்பாதுகாப்பதில் சிறந்த மற்றும் புத்திசாலி உயிரினங்களில் ஒன்றாக விளங்குகின்றன குரங்குகள். அந்த வகையில் முன்னதாக உணவு உண்டு திணறிய குட்டிக் குரங்குக்கு ஹெய்ம்லிச் (Heimlich Maneuver) எனும் பிரபல முதலுதவி முறையை வழங்கிய புத்திசாலி குரங்கின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
ஹெய்ம்லிச் முதலுதவி
ஒரு நபரின் சுவாசக் குழாயில் உள்ள தடையை அகற்றுவதற்கான முதலுதவி முறையான இந்த ஹெய்ம்லிச் முதலுதவி முறையில் வயிறு, தொப்புள் மற்றும் விலா எலும்பு பகுதிகளில் திடீரென வலுவான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இந்த வீடியோவில், அம்மா குரங்கு அதன் குழந்தையின் மீது வயிற்றில் அழுத்துவதைக் காணலாம், இதனால் குட்டிக் குரங்கின் மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் பொருள் எளிதாக வெளியே வரும். குட்டி குரங்கின் சுவாசக் குழாயில் சிக்கிய உணவு தாய் குரங்கு தந்த அழுத்தம் காரணமாக வெளியே வருவது இந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஃபிகன் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது 2.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 63 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், குரங்கின் புத்திசாலித்தனம், அதன் விரைவான சிந்தனை, தனது குழந்தையின் உயிரை விரைந்து சிந்தித்து காப்பாற்றியது ஆகியவை குறித்து நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக இதேபோல், கனடாவில் உள்ள கல்கரி உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தனது குழந்தையை காட்டி மகிழும் கொரில்லா ஒன்றின் செய்கை இன்ஸ்டாவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.