இண்டர்நெட்டின் பிரபலமான 'WORDLE' வார்த்தை விளையாட்டைத் தொடங்குவதற்கு உகந்த வார்த்தையை, அமெரிக்காவைச் சேர்ந்த மாஸசூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உலக ஃபேமஸ் வார்த்தை விளையாட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, பிரபலங்கள் முதல் சாதாரணர்கள் வரை உலகம் முழுவதும் குறுக்கெழுத்துப் போட்டிகள் மீது ஆர்வம் கொண்ட பலரையும் கட்டிப்போட்ட ஒரு வார்த்தை விளையாட்டு ’வேர்டில்’ (WORDLE).
நியூயார்க்கைச் சேர்ந்த ஜோஷ் வேர்ட்லே என்ற மென்பொருள் பொறியாளர், வார்த்தை விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்ட தன் துணைவரை மகிழ்விக்க இந்த தினசரி வார்த்தை விளையாட்டை முதன்முதலாக உருவாக்கினார்.
தொடர்ந்து இந்த விளையாட்டை 'த நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பலராலும் விளையாடப்பட்டு செய்திகளை WORDLE ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
தொடக்க வார்த்தைய சரியா யூகிக்கணும்!
தினசரி ஒரு ஐந்தெழுத்து வார்த்தை புதிர் இந்த விளையாட்டில் பகிரப்படும். மொத்தம் ஆறு வாய்ப்புகள் ஒருவருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு எழுத்தாக பொருத்திப் பார்த்து, இறுதி வாய்ப்புக்குள் சரியான ஐந்தெழுத்து வார்த்தையைக் கண்டறிய வேண்டும்.
WORDLE விளையாட்டின் தொடக்க வார்த்தை தான் பொதுவாக அன்றைய கேமின் வெற்றி, தோல்விகளை பொதுவாக நிர்ணயிக்கும். இந்த விளையாட்டுக்கான தொடக்க வார்த்தையாக எதை உபயோகிக்கலாம் என பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஏற்கெனவெ நெட்டிசன்கள் எழுதித்தள்ளியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் டிப்ஸ்
இந்நிலையில், வேர்டில் விளையாட்டைத் தொடங்குவதற்கான சிறந்த சொல் 'SALET' என அமெரிக்காவைச் சேர்ந்த மாஸசூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
SALET எனும் வார்த்தையின் பொருள் கழுத்தின் பின்பகுதியில் நீண்டு செல்லும் லேசான, வட்டமான ஹெல்மெட். 15ஆம் நூற்றாண்டில் இறுக்கமாக தலையில் பொருத்தப்பட்ட எஃகு தலைக்கவசம் தான் இந்த SALET.
இந்நிலையில் SALET எனும் இந்த வார்த்தையைத் தொடக்க வார்த்தையாகப் பயன்படுத்தினால் புதிர் வார்த்தையை அதிகபட்சம் ஐந்து யூகங்களில் கண்டுபிடிக்கலாம் என எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பில்கேட்ஸ் பரிந்துரை
முன்னதாக இந்த விளையாட்டை எளிமைப்படுத்தும் வகையில் WordleBot எனப்படும் Wordle உதவியாளரை நியூயார்க் டைம்ஸ் உருவாக்கியது.
இந்த விளையாட்டைத் தொடங்குவதற்கான சிறந்த வார்த்தைகளாக CRANE, CRATE, CARTE, SLATE, SLANT, SOARE மற்றும் ROATE ஆகியவற்றை இந்த வேர்டில்போட் பரிந்துரைக்கிறது.
முன்னதாக AUDIO, OUNCE, ADIEU ஆகிய வார்த்தைகள் சிறந்த தொடக்க வார்த்தைகள் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.