டைட்டானிக் கப்பல், உலக மக்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அது எந்தளவுக்கு என்றால், கடந்த 1912ஆம் ஆண்டு, கப்பல் கடலில் மூழ்கிய போதிலும், 1997ஆம் ஆண்டு அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் அளவுக்கு டைட்டானிக் கப்பல் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டைட்டானிக் கப்பல் குறித்து தொடரும் மர்மம்:
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் இன்றளவும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் உள்ளன. இதன் மூலம், சம்பாதிக்க நினைத்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம், டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்காக 'டைட்டன்' என்ற நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கப்பலின் பாதுகாப்பு குறித்து பல்வேறு எச்சரிக்கை விடப்பட்டிருகிறது. இந்த சூழலில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை தேடி சென்றுள்ளது டைட்டன் நீர்மூழ்கி கப்பல். ஆனால், இந்த கப்பல் தற்போது காணாமல் போன சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கப்பலில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர்.
மாயமான நீர்மூழ்கி கப்பலை ஸ்டாக்டன் ரஷ் என்பவர் இயக்கியுள்ளார். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் ஆவார்.
கப்பலை தேடி சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்:
ஸ்டாக்டன் ரஷின் மனைவியான வெண்டி ரஷ், தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஆகியோரின் கொள்ளுப் பேத்தி ஆவார். அவர்கள் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளாகப் பயணம் செய்துள்ளனர்.
வெண்டி ரஷ், ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷை 1986ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஓஷன்கேட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார். இவரே மாயமான கப்பலை ஓட்டியும் சென்றுள்ளார்.
பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஷாதா, அவரது மகன் சுலேமான் தாவூத், டைட்டானிக் கப்பல் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் கடற்படை வீரர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் காணாமல் போன கப்பலில் இருந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, கனடா நியூபவுண்ட்லாந்திலிருந்து நீர்மூழ்கி கப்பல் புறப்பட்டுள்ளது. கிளம்பிய 1 மணி நேரம் 45 நிமிடத்தில் கப்பலின் சிக்னல் கட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து, நீர்மூழ்கி கப்பலை கண்டிபிடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது, மீட்பு நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் பயணிகள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் அளவு, இன்னும் 1 மணி நேரத்திற்கே மட்டுமே உள்ளது.
அவசரகாலத்தில் 96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போன இடத்திற்கு பல்வேறு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆழ்கடலில் இருந்து வரும் சத்தத்தின் மூலம் கப்பலை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.