`மிஸ் வேர்ல்ட் 2021’ நிகழ்ச்சி தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போட்டியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 16 அன்று, போட்டி தொடங்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த போர்டோ ரிகோ பகுதியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். 


`போட்டியாளர்களிடையே கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு, மிஸ் வேர்ல்ட் நிறுவனம் இந்த ஆண்டின் மிஸ் வேர்ல்ட் நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றைத் தள்ளி வைக்கிறது’ என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மிஸ் வேர்ல்ட் போட்டிக்குத் தொடர்புடைய 17 போட்டியாளர்களும் பணியாளர்களும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. `மிஸ் இந்தியா 2020’ பட்டத்தை வென்றவரும், இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் `மிஸ் வேர்ல்ட்’ போட்டியில் பங்குபெறுபவருமான மானசா வாரணாசியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



`தன்னுடைய கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கடந்து உலக அளவிலான இந்த மேடையில் அவரால் பங்கேற்க முடியாததை எங்களால் நம்ப முடியவில்லை. எனினும் அவரது பாதுகாப்பு எங்களுக்குத் தற்போது மிகவும் முக்கியம்’ என மிஸ் இந்தியா நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. 






மேலும், `மானசா மீண்டும் நாடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறோம். அவரது உடல்நலத்தை மீண்டும் சரி செய்து, அவரை இன்னும் பலமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் மீண்டும் அனுப்பக் காத்திருக்கிறோம்’ என்றும் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது


இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று அடுத்த 90 நாள்களுக்குள் போட்ரோ ரிகோவில் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



மானசா வாரணாசி


 


பல்வேறு வைரஸ் தொற்று நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மிஸ் வேர்ல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


மருத்துவர்கள் ஒப்புதல் அளித்த பிறகே, போட்டியாளர்கள் தங்கள் சொந்த நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. `மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி, அடுத்ததாக தனிமைப்படுத்துவது, கண்காணிப்பது, பரிசோதனை மேற்கொள்வது ஆகியவற்றை அடுத்தடுத்து செய்வதாக அறிவித்துள்ளோம். மருத்துவ நிபுணர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகே, போட்டியாளர்களும், பணியாளர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.