’பிளே கிரவுண்டு’,  ‘சொட்டை மண்டை’, மண்டையில ஆம்லெட் போடலாம் போலிருக்கே!’, ’எலேய் தொப்பியை மாட்டு; கண்ணு கூசுது.’ - இவை எல்லாம் நாம் பள்ளி, கல்லூரி நாட்களில் ஆசிரியர்களுக்கு பட்ட பெயர் வைக்க பயன்படுத்தியது; பிறரை கேலிச் செய்ய பயன்படுத்திய வார்த்தைகள். அல்லது, இவைகளை பயன்படுத்தும் நபர்களையாவது நாம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம் இல்லையா? அட, இருக்கவே, இருக்கு சினிமா; தொலைக்காட்சி  பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள்;  இதுபோன்ற உருவக்கேலிகள் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களைக் காண்பது அரிது என்றுதான் சொல்லவேண்டும். அப்படி, ‘வழுக்கை’ என்பதை வைத்து நசைச்சுவை என்ற பெயரில் நாரசமான உருவக்கேலிகளோடு நகரும் காலம்தான் இது.


உருவக்கேலி செய்வது தவறு, வன்முறையான அணுகுமுறை என்பது குறித்து பேசுதற்கே 20 - ஆம் நூற்றாண்டாகிவிட்டது. ஆனாலும், இங்கு உருவக்கேலிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. இருவரும் உருவக்கேலிக்குள்ளான அனுபவம் இருக்கும். எப்போதுதான் இது முடிவுக்கு வரும் என்று நாம் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் (employment Tribunal in the United Kingdom (UK)) உருவ கேலி பற்றி, குறிப்பாக ஆண்களின் தலையில் முடி இல்லை என்பதை ‘வழுக்கைத் தலை’ என்று குறிப்பிடுவது பாலியல் குற்றம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


Employment Tribunal in UK holds calling man "bald" is sexual harassment


report by @GitiPratap https://t.co/NypjloZ8vV


— Bar & Bench (@barandbench) May 14, 2022


வீடு,பொது வெளி, பணியிடம் -இவை ஆண், பெண் என் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாக்கப்படுவது நிகழும். பொதுவாக, பணியிடங்களில் பெண்களின் தோற்றம், உடலை உள்ளிட்டவைகள் குறித்து உருவகேலி செய்வது தவறு என்றும், பாலியல் குற்றம் என்றும் சொல்லப்படும். போலவே, ஆண்களும் இச்சூழலுக்கு உள்ளாக்கப்படும் போது அதுவும் குற்றம்தான் என இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


 



வழக்கும்,  பின்னணியும்:


ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள மேற்கு யோர்ஷயர் (West Yorkshire) மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் பங் நிறுவனத்தில் (British Bung Company) மேற்பார்வையாளராக பணி புரிபவர் ஜேம்ஸ் கிங் (Jamie King). இவர் அந்நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகள் எலக்ட்ரிசியனாக பணி செய்யும் டோனி ஃபின் (Tony Finn) என்பவரை அவரின் தோற்றத்தை குறிப்பிட்டு கேலி செய்துள்ளார். இதை எதிர்த்து குரல் கொடுத்தற்காக டோனி ஃபின் 2021 ஆம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். 


இதை எதிர்த்து டோனி ஃபின் Equality Act, 2010 சட்டத்தின் படி ஜேம்ஸ் கிங் மீது வழக்கு தொடர்ந்தார். அவரின் புகாரின்படி, ஜேம்ஸ் தன்னை உருவக்கேலி செய்ததாகவும், தலையில் முடி இல்லாததை குறிப்பிட்டு, ‘பால்டு’ (bald) (வழுக்கைத் தலை ) என்ற கூறியதாகவும், தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 


இந்த வழக்கு இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயத்தின் Employment Tribunal-இன் மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவரான ஜொனதன் பிரைன் (Jonathan Brain)  கூறுகையில், ” எங்களின் தீர்ப்பின்படி, கிங் எல்லை மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். அவரின் தோற்றத்தை கேலி செய்திருக்கிறார். bald என்ற வார்த்தைக்கும்  (”the protected characteristic of sex on the other.") ஒருவரிம் பாலினம் சார்ந்து பாதுகாப்படும் பண்புக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆண்களின் தலையில் முடி இல்லாததை கேலி செய்யும் விதமாக, ‘ bald' என்று சொல்வதும் பாலியல் குற்றமே.” என்று தெரிவித்துள்ளார். 


இவ்வழக்கில் மூவர் அடங்கிய நீதிபதி குழுவின் தீர்ப்பின்படி, ஆண்களை வழுக்கைத் தலை என்று குறிப்பிடுவது பாலியல் குற்றம் என்று கூறியுள்ளது. 


மேலும், பெண்களின் உடல் பாகங்கள் குறித்து கேலி செய்வது எப்படி பாலியல் குற்றமோ, அதேபோல, ஆண்களை வழுக்கைத் தலை என்று சொல்வதும் பாலியல் குற்றம் என்றும், பாதிக்கப்பட்ட ஃபின்னிற்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


தலை முடிவு உதிர்தல் இயல்பு. இதை விமர்ச்சிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? யாவும் இயல்பில் அழகே. தனிப்பட்ட விஷயங்கள் குறித்து விமர்சிக்க வேண்டாமே. உருவக்கேலி செய்வதை தவிர்ப்போம்.