US Gun Shot: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் ஆயுதத்தில் ட்ரம்பை கொல்ல வேண்டும் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில், பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மாணவர்கள் மீது ஒரு நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் முறையே 8 மற்றும் வயதான இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சில மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் சம்பவத்தின் முடிவில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் இருந்த வாசகங்கள் தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

”இந்தியா மீது அணுகுண்டு”

23 வயதான ராபின் வெஸ்ட்மேன் எனும் இளைஞர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வைத்திருந்த யூட்யூப் சேனல் தற்போது டெலிட் செய்யப்பட்ட நிலையில், கடைசியாக ராபின் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களில், இந்தியா மீது அணு ஆயுதம் வீச வேண்டும், டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் உள்ள ரைஃபிள், ஷாட்கன் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவற்றை தான், மாணவர்கள் மீதான தாக்குதலிலும் ராபின் பயன்படுத்தியுள்ளார்.

ஆயுதங்களில் சர்ச்சைக்குரிய வாசகங்கள்..

செல்போனில் படம்பிடிக்கப்பட்டு 10 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஆயுதங்கள், தோட்டாக்கள் இருப்பதை காண முடிகிறது. மேலும் அந்த ஆயுதங்களில், “டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும், ட்ரம்பை இப்போதே கொல்ல வேண்டும், இஸ்ரேல் கட்டாயம் வீழ்ச்சி அடைய வேண்டும், இஸ்ரேலை எரியுங்கள், இந்தியா மீது அணு ஆயுதம் வீசுங்கள், உங்கள் கடவுள் எங்கே? குழந்தைகளுக்காக” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுபோக ஏற்கனவே பள்ளிகளின் மீது தாக்குதல் நடத்திய நபர்களின் பெயர்களையும் தோட்டாக்களின் மீது ராபின் பொறித்து இருந்ததையும் வீடியோ தெளிவுபடுத்துகிறது.வீடியோவின் ஒரு பகுதியில், “சிறிய துப்பாக்கியை கையில் எடுத்து, தேவைப்பட்டால் இது எனக்கானது” என கூறியுள்ளார். செய்யப்போகும் செயலுக்கு மன்னிப்பு கோரி தனது குடும்பத்திகு ஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார்.

முடிவில்லாத துப்பாக்கி கலாச்சாரம்:

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு அரங்கேறுவது என்பது தொடர்கதையாகவே உள்ளது. கதோலிக் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை போன்று, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 146 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவாம்.  மின்னபோலிஸ் தாக்குதலை நடத்திய ராபினும் முறைப்படியே அந்த ஆயுதங்கள் அனைத்தையும் வாங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆணாக பிறந்து ராபர்ட் என அடையாளம் காணப்பட்ட அவர், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த 2022ம் ஆண்டு முதல் ராபின் என அடையாளத்தை மாற்றியதையும் காவல்துறை உறுதி செய்துள்ளது.