H-1B visa: அமெரிக்காவின் H-1B விசாவிற்கான கட்டணம் சுமார் 90 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி உத்தரவு:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H1B விசாவிற்கான ஆண்டு கட்டணத்தை, ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இன்ன பிற கட்டணங்களையும் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார். இதனால், ஏராளமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், H-1B மற்றும் H4 விசா கொண்டிருக்கும் தங்களது ஊழியர்கள் யாரேனும் வெளிநாடுகளில் இருந்தால், உடனடியாக நாளைக்குள் (21ம் தேதி) அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கெடு விதித்துள்ளதாம். மேலும், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட விசாக்களை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே தங்கியிருக்கவும் வலியுறுத்தியுள்ளதாம். இதுபோன்று, ஜேபி மார்கன் நிறுவனமும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ரூ.90 லட்சம் கட்டணம்:
இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கான , H1B விசாக்களுக்காக குறிப்பிட்ட நிறுவனமானது அமெரிக்க அரசிற்கு ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அந்த கட்டணத்தை ட்ரம்ப் நிர்வாகம் பன்மடங்கு உயர்த்தி தற்போது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், ஒரு ஊழியருக்கு ஓராண்டிற்கான H1B விசாவை பெற, எந்தவொரு நிறுவனமும் இன்னபிற கட்டணங்களையும் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. இனி விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கட்டணத்தை செலுத்த தவறினால், நாட்டின் நலன் என்ற பெயரில் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், புதிய விதி செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்து 12 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சட்ட சிக்கல்கள் எதையும் எதிர்கொள்வதை தவிர்க்க, H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்ப மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு
விசா கட்டணம் தொடர்பான அறிவிப்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா முறையை தவறாக கையாள்வதாகவும், கணினி தொடர்பான துறைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிப்பதாகவும் அதிபர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக பேசுகையில், “H-1B குடியேற்றமற்ற விசா திட்டம் தற்காலிக தொழிலாளர்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்து கூடுதல், உயர் திறன் கொண்ட செயல்பாடுகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது அமெரிக்க தொழிலாளர்களை குறைந்த ஊதியம், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுடன் சேர்ப்பதற்குப் பதிலாக மாற்றுவதற்கு வேண்டுமென்றே சுரண்டப்பட்டுள்ளது” என ஆவேசமாக தெரிவித்துள்ளார். இந்தத் துஷ்பிரயோகங்களைத் தடுக்க இந்தத் திட்டத்தை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அதிக செலவுகள் அவசியம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.