மத்திய அமெரிக்காவில் நிலவும் வறுமை, வன்முறை அங்குள்ள மக்களை அகதிகளாக்கி வருகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோ அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
பெலீஸ், கோஸ்டாரிக்கா, எல் சால்வடார், கவுதமாலா, ஹொண்டூராஸ், நிகாராகுவா, பனாமா ஆகிய 7 நாடுகள் தான் மத்திய அமெரிக்கக் கண்டத்தில் உள்ளன.
இந்த நாடுகளில் வன்முறைக்கும், வறுமைக்கும் குறைவில்லை. அதனாலேயே தான் இங்குள்ள மக்கள் குடிபெயர்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலே அமெரிக்கா மெக்சிகோ இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு ட்ரக்கில் மறைந்தபடி மெக்சிகோ வழியாக அகதிகளாக வேறு ஒரு இடம் தேடிச் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சோகச் சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவில் சியாபஸ் பகுதியில் ட்ரக் சென்று கொண்டிருந்தபோது அதன் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மேடையில் மோதி கவிழ்ந்தது. இதில் அந்த ட்ரக்கில் இருந்தவர்களில் 53 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரழந்தனர். 58 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சியாபஸ் சிவில் பாதுகாப்பு முகமை அதிகாரி கூறுகையில், இந்த விபத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
காயமடைந்தோரில் சிலர் தாங்கள் கவுதமாலாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளனர். மெக்சிகோவில் அண்மையில் நிகழ்ந்த மிகக் கோரமான சாலை விபத்து இதுவே என்று கூறினார்.
ஆண்டு தோறும் மத்திய அமெரிக்காவில் இருந்து தப்பிக்க நினைக்கும் மக்கள் பலரும் இவ்வாறாக பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்வதால் கடத்தல்காரர்களிடம் தங்களின் வாழ்நாள் சம்பாத்தியம் முழுவதையும் இழக்கும் மக்களும் இருக்கின்றனர்.
சர்வதேச அகதிகள் அமைப்பின் கூற்றின்படி அமெரிக்க மெக்சிகோ எல்லை தான் கடப்பதற்கு மிகவும் ஆபத்தான எல்லை. இந்த எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் முயற்சியில் நடப்பாண்டில் மட்டும் 650 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ சாலை விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் லோபெஸ் ஓப்ரெடார் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த கோர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பஞ்சம் பிழைக்கச் சென்ற வழியில் உயிரையும் இழந்த அகதிகளின் கதை உலகம் முழுவதும் பெரும் சோகத்தைக் கடத்தியுள்ளது.