நம்முடைய வீட்டில் பலரும் வளர்க்க துடிக்கும் செல்ல பிராணிகளில் ஒன்று நாய். ஏனென்றால் அது அதிக நன்றி உள்ளம் கொண்டது என்ற கூற்று உள்ளது. அதற்கேற்ப சில செல்ல பிராணி நாய்கள் தங்களுடைய உரிமையாளர்களுடன் மிகவும் பாசமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 


மெக்சிகோ நாட்டில் லூர்ட்ஸ் மல்னான்டோ லோப்ஸ் என்ற பத்திரிகையாளர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். 69 வயதான இவருக்கு அவருடைய நாய் ஒரு நல்ல துணையாக இருந்து வந்துள்ளது. பத்திரிகையாளராக பணியாற்றியபோது இவர் சில முக்கியமான சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 


இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் கடந்த ஆண்டு மெக்சிகோ அதிபரிடமும் முறையிட்டார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் அதிபரிடம் அவர் முறையிட்டார். இந்தச் சூழலில் கடந்த வாரம் மெக்சிகோ நாட்டில் இருந்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 




இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்த போது லோபஸை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் வெளியே சென்று தன்னுடைய உரிமையாளர் லோபஸ் வரும் வரை வீட்டின் வாசலில் அவருடைய நாய் காத்திருக்கும். அந்தவகையில் தற்போது தன்னுடைய உரிமையாளர் லோபஸ் கொலை செய்யப்பட்டது தெரியாமல் அவருடைய வருகைக்காக அந்த நாய் வீட்டில் வாசலில் படுத்து கொண்டுள்ளது. 






இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். தன்னுடைய உரிமையாளரின் மறைவை பற்றி தெரியாமல் அந்த நாய் தவிப்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மெக்சிகோ கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வேகமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க: WHO தலைவராக மீண்டும் டெட்ரோஸ் அதோனோம்? டிவிட்டர் வாயிலாக நாமினேட் செய்த உலக சுகாதார நிறுவனம்!