பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனராக இருப்பவர் மார்க் சக்கர்பெர்க். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்ப, வணிக உலகை தொடர்ந்து தற்போது விளையாட்டு உலகிலும் தடம் பதித்துள்ளார். ஜப்பானிய மற்போர் போட்டியில் கலந்து கொண்ட சக்கர்பெர்க், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.


போட்டியில் வெற்றி பெற்றிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சக்கர்பெர்க், "எனது முதல் ஜியு ஜிட்சு போட்டியில் பங்கேற்று கெரில்லா ஜியு ஜிட்சு அணிக்காக சில பதக்கங்களை வென்றேன். எனக்கு பயிற்சி அளித்த டேவ்கமாரில்லோ, கைவு ஆகியோருக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.


பதக்கம் வென்று அசத்திய சக்கர்பெர்க்:


சக்கர்பெர்க் பகிர்ந்த சில படங்களில், அவர் வெள்ளை சீருடை அணிந்துருப்பதை காணலாம். மற்றொரு படத்தில், அவர் ஒரு குழுவுடன் போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த பதிவை பகிர்ந்ததிலிருந்து, 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர், அவரின் பதிவை லைக் செய்துள்ளனர். கருத்து பதிவிட்டுள்ளனர்.


பல்வேறு தரப்பினர், சக்கர்பெர்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். " அருமை, வாழ்த்துக்கள்" என ஒரு பயனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


கடும் பயிற்சியில் ஈடுபட்ட சக்கர்பெர்க்:


ஜியு-ஜிட்சு என்பது தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமாகும். ஜப்பான் நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான இதில் பல்வேறு திறன்களை கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். வீரரின் வலிமையை தாண்டி, எதிர் தரப்பு வீரரை மடக்கி பிடிப்பது, திணற வைப்பது, தூக்கி வீசுவது போன்ற பல திறன்களை கையாண்டால் மட்டுமே வெல்ல முடியும்.


 






சக்கர்பெர்க், பல மாதங்களாக ஜியு-ஜிட்சு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றொரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், அவர் தைவானிய குத்துச்சண்டை வீரர் கை வூவிடம் பயிற்சி பெறுவதைக் காணலாம். அவரை துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் அவர் எதிர்கொள்வதை அதில் பார்க்கலாம்.


மார்க் சக்கர்பெர்க், பேஸ்புக்கை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர். தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இயங்கி வருகிறார். இவரின், சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 85 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.