முதுகில் குத்திவிட்டனர்... இப்படித்தான் ஆஸ்திரேலியா பிரான்ஸுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைக் கைவிட்டபோது பிரான்ஸ் வெகுண்டெழுந்து விமர்சித்தது.
பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் திடீரென்று பிரான்ஸுக்கு கல்தா கொடுத்த ஆஸ்திரேலியா பிரிட்டன், அமெரிக்காவுடன் கைகோர்த்தது. தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதனால் பிரான்ஸ் அரசு மிகுந்த ஏமாற்றமடைந்தது.
இந்நிலையில் தான் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரீஸனுடன் தொடர்பு கொண்டு டீல் தொடர்பாக பேசியுள்ளார்.
அவர்களுக்கு இடையே நடைபெற்ற நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான உரையாடல் கசிந்துள்ளது. அந்த உரையாடலை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 14ல் நடந்த உரையாடல்:
செப்டம்பர் 14 ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீஸனுக்குப் பேசியுள்ளார். அப்போது அவர், மோரீஸனிடம் நமது நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக நான் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாமா இல்லை மோசமான செய்தியையே எதிர்பார்க்க வேண்டுமா என்று வினவியுள்ளார்.
ஆனால் அதற்கு மோரீஸன் என்ன சொன்னார் என்ற தகவல் கசியவில்லை. பிரான்ஸை கழற்றிவிட்டுவிட்டு பிரிட்டன், அமெரிக்காவுடன் நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒப்பந்தத்தைப் போடும் வரை அது குறித்து ஆஸ்திரேலியா எதுவும் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை மாற்றியதாலேயே பிரான்ஸ் தங்களின் முதுகில் ஆஸ்திரேலியா குத்திவிட்டதாகக் கூறுகிறது.
ஆக்கஸ் திட்டமும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும்:
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன.
இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்க உதவுவதாக பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அதன்படியே பிரான்ஸுடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா கைவிட்டது.
முன்னதாக பிரான்ஸிடம் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டே 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், ஆஸ்திரேலியா பிரான்ஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு அதிபர் மேக்ரான், ஆஸி பிரதமர் மோரீஸனுடன் தொலைபேசியில் உரையாடியது பகுதியாக கசிந்துள்ளது.