மே மாதம் – உலகத்தமிழர்களுக்கு  2009-ம் ஆண்டிலிருந்து மறக்க முடியாத ஒரு மாதமாக அமைந்துவிட்டது. உரிமைக்காகப் போராடிய தமிழினத்தின் போர்க்குரலை, துரோகம், சதி, பயங்கர ஆயுதங்கள் மூலம் மெளனிக்க செய்த மாதம் என்பதால் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் குறிப்பாக, என்னவென்றே தெரியாமல் பலியான குழந்தைகளின் வலியால் ஆறாத ரணமாகவே இன்றும் தொடர்கிறது. 


உரிமைக்காக எத்தனையோ இயக்கங்கள் போராடுகின்ற நிலையில், ஈழத்தில் மட்டும் அப்படியென்ன செய்துவிட்டார்கள் என்ற கேள்வி, இன்றைய தலைமுறைக்கு எழுவது வாடிக்கைதான். அதனால்தான், இந்த சுருக்க எழுத்துக்கூட்டலை தருகிறேன்.


ஈழத்தின் வரலாறு என்பது தொன்று தொட்டு வரக்கூடியது. அண்மையில் வெளியாகும் சில தரவுகள் எல்லாம், இலங்கையே தமிழர்களுக்குச் சொந்தமானது என்றெல்லாம், இணையத்தில் வலம் வருகின்றன. நீண்ட நெடிய வரலாற்றை  கேட்பதற்கு இன்றைய தலைமுறை தயாராக இருக்காது என்பதால், கண்ணுக்குத் தெரிந்த வரலாற்றை மேலோட்டமாக எடுத்துக் கொள்வோம். 




இலங்கை என்று எடுத்துக் கொண்டால், பயிர்களின் வளமையும், கலாச்சாரப் பெருமையும் அறிவின் தலைமையும் செல்வத்தின் செழுமையும் நிறைந்த இடங்கள் என்றால், அது பெரும்பாலும் தமிழர்கள் வசித்த, வசிக்கும் இடங்களாகத்தான் இருக்கிறது. அந்தளவுக்கு தமிழர்கள் நாகரிகமாக வசித்து வந்தனர். ஆனால், தமிழர்களிடையே இருந்த  ஒற்றுமையின்மையை பயன்படுத்திக் கொண்ட சில இலங்கையின் மத்திய அரசியல் தலைமைகள், தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு உரிமைக்காக போராடும் நிலைக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்கள் தள்ளப்பட்டனர். 


உரிமைக்காக, 80-களில் இருந்து பல்வேறு வகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், ஆயுதப்போராட்டமாக மாறிய பிறகு, ஈழப்போராட்டத்தின் வீச்சு, சர்வதேசங்களிலும் எதிரொலித்தது. சகோதர இயக்கங்கள், பிரபாகரனின் விடுதலைப்புலிகளால் நசுக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பெரிதாக வைக்கப்பட்டாலும்,  விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆளுமையின் கீழ் , ஈழம் செழிப்பாகவே இருந்தது என்பதுதான் கண்கூடு. 


உரிமையும் சர்வதேசமும் ஏற்கக்கூடிய தன்னாட்சி அதிகாரமும் இல்லாவிட்டாலும், ஈழத்தில் சுதந்திரமாகத்தான் பெரும்பாலும் தமிழர்கள் வசித்து வந்தனர். வங்கிகள், அஞ்சல் நிலையம், நீதிமன்றங்கள், நிதி நிர்வாக அமைப்புகள், போலீசார், ராணுவம் என ஒரு தனி நாட்டிற்கு என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் பிரபாகரனின் ஆளுமையின் கீழ் இருந்த ஈழப்பகுதிகளில் இருந்தது என்பது கண்டவர்களும் உணர்ந்தவர்களும் ஒப்புக் கொள்வர்,, அதுமட்டுமன்றி, ஈழத்தின் எந்த இடத்திலும் களவு, பாலியல் வன்கொடுமை, போதை போன்ற நஞ்சு விடயங்கள் அறவே கிடையாது. அதுமட்டுமல்ல,  சிங்களவர்களே பாராட்டும் வகையில்தான், ஈழத்தின் நீதி – நிதி நிர்வாகங்கள் இருந்தன என்பதும் வரலாற்றுப் பெருமைகள்.




ராணுவ ரீதியான மோதல்களும், சர்வதேச உதவியுடன் சிங்கள அரசின் இடையூறுகளும்தான் தமிழர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது.  தமிழர்களின் வலிமையும் புத்திக் கூர்மையான ராணுவ நகர்வுகளும், இயக்கத்திற்கு தொடர் வெற்றிகளைப் பரிசாக்கின. சர்வதேச அளவில், உரிமைக்காகப் போராடும் ஆயுதக்குழுக்களில், விமானப்படையை வைத்திருந்த அளவுக்கு திறன் வாய்ந்த இயக்கமாக திகழ்ந்தது இயக்கம். 


இந்த இயக்கத்தின் மீதும் சில விதிமீறல்கள், சிறார்களை வீரர்களாகப் பயன்படுத்தியது என்ற சிற்சில குற்றச்சாட்டுகள் இருந்தன என்பதையும் கட்டாயம் பதிவு செய்கிறோம். அதேபோல், இயக்கத்தால் சிங்கள தலைவர்களும் அப்பாவி சிங்களர்களும் பலியாகினர் என்பதையும் குறிப்பிட வேண்டும். 


சிங்கள ராணுவத்தால், ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில்தான், துரோகம், சதி, அண்டை நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புடன், சிறிதுசிறிதாக, இயக்கத்தை உடைத்து, தோல்வியின் விளிம்புக்கு அழைத்துச்சென்றது இலங்கை ராணுவம். மக்களைப் பிணையாக வைத்து, கண்டிராத -  கேட்டிராத வகைகளில் அனைத்து வகைப் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றியது சிங்கள ராணுவம் என்பதை பிற்காலங்களில் வெளியான படக்காட்சிகள் உலகிற்கே எடுத்துக்காட்டின. 


இன்று உக்ரைனில் குண்டுபோட்டவுடன், மனித உரிமையை மீறுகிறது – போர்க்குற்றம் செய்கிறது ரஷ்யா என அமெரிக்காவின் தலைமையில் பெரும்பாலான நாடுகள் அலறுகின்றன. பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவை முடக்கப் பார்க்கின்றன.  ஆனால், இதில் ஒரு சில தடைகளை மட்டும் போட்டிருந்தால்கூட போதும், அன்றைய தினம் இலங்கை, இத்தனை பெரிய மனித உரிமை மீறல்களையும் இன அழிப்பையும் செய்திருக்காது. பின் வாங்கி இருக்கும். குறைந்தபட்சம் சமரப்பேச்சின் மூலம் தீர்வு கண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.


இன்று வாய்கிழிய உக்ரைனுக்கு வக்காலத்து வாங்குவோர், அன்று, இதே உக்ரைனின் ஹெலிகாப்டர்களும் ராணுவ வீரர்களும்தான் தமிழர் பகுதிகளில் குண்டுவீச்சை அரங்கேற்றினர் என்பதை மறக்கமுடியாது என முன்னாள் போராளிகள் பலர் பதிவு செய்கின்றனர். 


இன்று கூட, போராளிகளை அழித்துவிட்டேன் எனக் கூறிய சிங்கள மக்களால் மாவீரனாக பார்க்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று, அதே மக்களுக்குப் பயந்து, ஓடி ஒளிந்துக் கொண்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதைத்தான் தன் வினை தன்னைச்சுடும் என்பார்கள். இதை சொன்னதுக்கூட, அவரது தளபதியாக இருந்த விடுதலைப்புலிகளை வீழ்த்திய, அன்றைய ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாதான். 


ஈழத்தமிழர்களின் மனதில் இன்றும், இயக்கத்தின் ஆளுமையின் கீழ் இருந்த போது, ஓழுக்கமும் கல்வியும் கலாச்சாரமும் செழுமையாக இருந்தது என்பது பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. இது ஈழம் சென்ற போது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் பதிவுசெய்யும் முக்கிய பேச்சு என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. 


வடக்கு,கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நிலை இப்படி என்றால்,  200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலைக்காகச்சென்ற மலையகத் தமிழர்களின் நிலைமை இன்னமும் மோசமாக இருக்கிறது . உரிய சம்பளம், உரிய தங்குமிடம் இல்லாமல், மோசமான வாழ்வியலில் உள்ளனர் என்பதுதான் இன்றைய யதார்த்தம். 


மே மாதம் என்றாலே ஈழத் தமிழர்களின் உரிமைப்போர் மெளனித்ததும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதும் கண்களில் நிழலாடும் நிலையில், இந்த மே மாதத்திலாவது சர்வதேசங்களும் விழித்துக் கொள்ளட்டும். இலங்கையில் சிங்களவர்களும் தற்போது உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர். உக்ரைனுக்காக குரல்கொடுக்கும் சர்வதேசமே,  இலங்கையிலே பாதிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி வாங்கி கொடுக்க முன் வாருங்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க மறவாதீர்கள் என்பதே இன்றைய ஒட்டுமொத்த இலங்கைவாசிகளின் குரலாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.