Contact Lens : அமெரிக்காவில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய நபரின் கருவிழி காணாமல்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கான்டாக்ட் லென்ஸ் உடன் தூக்கம்


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக் க்ரும்ஹோல்ஸ் (21). இவருக்கு பள்ளி பருவத்திலேயே கண் பார்வை மங்கியதால் கண்ணாடி அணிந்து வந்தார். கல்லூரி சேர்ந்தவுடன் கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) அணிந்து வந்திருக்கிறார். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனை பயன்படுத்துபவர்களுக்கு தனி விதிமுறைகளே உள்ளது. 


தூங்க செல்வதற்கு முன்பு கான்டாக்ட் லென்ஸை கழட்டிவிட்டு தூங்க வேண்டும். ஆனால் மைக் க்ரும்ஹோல்ஸ் கல்லூரியில் இருந்த வந்த அசதியில் ஒரு நாள் கழட்டி வைக்காமல் அப்படியே தூங்கி கொண்டிருந்தார். அதனால்  வந்த விளைவுதான் அவரின் ஒரு கண் பார்வை பறிபோனது.


காலையில் அதிர்ச்சி


அதன்படி, ஒரு நாள் மைக் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது இரவு தூங்குவதற்கு முன்பு கான்டாக்ட் லென்ஸை கழட்டி வைக்காமல் அப்படியே தூங்கி உள்ளார். தூங்கிய அரைமணி நேரத்திற்கு பிறகு மைக் எழுந்துள்ளார். அப்போது அவருக்கு பயங்கர கண் எரிச்சல் ஏற்பட்டது. பொதுவாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கு கண் ஏரிச்சல் ஏற்படுவது வழக்கம். அதுபோல நினைத்து மைக் மீண்டும் தூங்கி உள்ளார்.


பின்னர், அடுத்த நாள் காலையில் தூங்கி எழுந்த மைக் அவரது கண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது வலது கண்ணீல் இருந்த கருவிழி காணாமல் போய் வெள்ளை நிறத்தில் இருந்ததோடு அவரது கண் பார்வை பறிப்போனது. 


இதனை அடுத்து, மைக் க்ரும்ஹோல்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு  மிகவும் அரிதான அக்கன்தமோய்பா கேராடிட்டிஸ் (Acanthamoeba keratitis) எனும்  ஒட்டுண்ணி கருவிழியை சாப்பிட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். கான்டாக்ட் லென்ஸை கழட்டாமல் அப்படியே தூங்கியதால்  அரிய வகையான உண்ணும் ஒட்டுண்ணி  தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வலது கண்ணில் பார்வை நிரந்தராக இழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.


”வேதனையாக உள்ளது”


இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மைக், தன்னை போன்று யாருக்கு நடக்காமல் இருக்க அவரது சமூக வலைதளத்தில் தனது பிரச்சனை குறித்து பதிவிட்டிருந்தார். அதன்படி, "நான் கடந்த எழு வருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து வருகிறேன். ஒரு நாள் கான்டாக்ட் லென்ஸை கழட்டாமல் தூங்கியதால் என்னுடன் வலது கண் பார்வையை இழந்துள்ளேன். கண்ணில் பார்வை இழந்ததால் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது மற்றும் வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழலில் நான் இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது.  


நான் தற்போது இருக்கும் பயங்கரமான சூழ்நிலை யாருக்கும் வரக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நீங்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு தூங்க கூடாது. அதுமட்டுமின்றி குளிக்கக் கூடாது” என்று வருத்தமாக மைக் குறிப்பிட்டிருந்தார்.