US Shooting : அமெரிக்காவில் ஓடும் காரில் பாட்டியை, 6 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் 6 வயது சிறுமி தனது பாட்டியை ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தெரிவிக்கையில், ” 6 வயது சிறுமியானது புளோரிடாவில் பகுதியில் உள்ள சாலையில் தனது பாட்டியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த துப்பாக்கியை சிறுமி கையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியை நோக்கி 6 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுமியின் பாட்டிக்கு கீழ் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்துள்ள நிலையிலேயே பாட்டி காரை வீடு வரைக்கும் ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர், அமெரிக்க அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு நடந்தவற்றை எல்லாம் கூறினார். பின்பு, அவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமி மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து தரப்பினரிமும் போலீசார் விசாரணை செய்தனர். இந்த சம்பவமானது தற்செயலாக நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமி தனது 57 வயது பாட்டியின் துப்பாக்கியை காரின் பின் இருக்கையில் உள்ள பாக்கெட்டில் இருந்து கண்டெடுத்துள்ளார். அதை விளையாட்டாக எடுத்து கையில் வைத்து பாட்டியை சுட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் அலட்சியமாக இருந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் 73 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் கடந்த ஆண்டில் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் மட்டும் 44,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடங்கி 43 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அமெரிக்காவில் 73 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Karachi Attack: போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் - பாகிஸ்தானில் பயங்கரம்