ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக, மக்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது சில சமயங்களில் அது மிகப்பெரிய பதிப்பிலோ இழப்பிலோ கொண்டு போய் விடுகிறது. அது போன்ற ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. மேரிலேண்டில் நடந்த அந்த சம்பவத்தில் பாம்பை விரட்டுவதற்காக ஒரு நபர் நெருப்பை பயன்படுத்தி இருக்கிறார். அதில் இருக்கும் தீ 10,000 சதுரடி வரை பரவி வீட்டையே கருக்கி நாசமாக்கியது. பாம்பு பல காலமாகவே இந்த வீட்டின் உரிமையாளரை தொந்தரவு செய்து வந்துள்ளது. அதற்கு முன் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்திருக்கிறார்கள், அப்போது அந்த வாடகைக்கு இருந்தவரையும் தொந்தரவு செய்துள்ளது. அதனால் அந்த பாம்பு அவருக்கு மிகவும் முக்கியமான பிரச்சனையாக மாறி போனது. அதனால் எப்படியாவது அதனை விரட்ட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்துள்ளார்.



எதுவும் கைக்கொடுக்காத நிலையில், பண்டைய முறையான புகையிட்டு விரட்டுவதை யாரோ சொல்ல கேட்டிருக்கிறார். புகை போட்டால் பாம்பு ஓடிவிடும் என்பதால் நிலக்கரிகள் வாங்கி வந்து வீட்டில் வைத்து எரித்து வீடு முழுவதும் புகையாக்க முயற்சித்துள்ளார். ஆனால் எளிதில் தீப்பற்றக்கூடிய வீட்டு உபயோக பொருட்களின் அருகில் அந்த நிலக்கரிகளை வைத்துவிட்டார். அதனால் பரபரவென பற்றிய தீயினால் ஒட்டுமொத்த வீடு முழுவதும் தீ பரவ ஆரம்பித்தது. அப்படியே ஒட்டுமொத்த வீடும் எரிந்து சாம்பலாகி போனது. இந்த வீட்டின் மதிப்பு 14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. யாருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை.






இது குறித்த படங்களும் விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பீட் பிரிங்கர் என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வெளியாகியுள்ள இந்த படங்களுக்கு கீழ் பலர் விதவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். வெளியாகியுள்ள படங்களில் வீடு நன்றாக கொழுந்து விட்டு எரிவதை காண முடிகிறது. பின்னர் எரிந்து முடிந்து சம்பலோடு சாம்பலாக தரைமட்டமாக கிடக்கும் படங்களும் வெளியாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக உயர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பாம்பின் நிலை என்ன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்னதான் வீட்டின் உரிமையாளருக்கு இது மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும், துயரான சம்பவம் ஆனாலும் நெட்டிசன்கள் சம்பவத்தை கலாய்த்து தள்ளுகின்றனர்.