அமெரிக்காவில் 29 வயது நபர் ஒருவர், வேற்று கிரக உயிரினங்கள் குறித்த தகவல்களை அதிபரிடமிருந்து பெற்றதாகக் கூறி, திருடிய டிரக்கைப் பயன்படுத்தி விண்வெளிப் படைத் தளத்திற்குள் நுழைந்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் புளோரிடாவைச் சேர்ந்த கோரி ஜான்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புளோரிடாவின் ப்ரெவர்ட் கவுண்டியில் உள்ள பேட்ரிக் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தளத்திற்குச் செல்வதற்கு முன்பு, 2013 மாடலான ஃபோர்டு எஃப்150-ஐ ஜான்சன் திருடியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், விண்வெளிப் படைத் தளத்திற்குள் அவர் நுழைய முயற்சித்தபோது அங்கிருந்த அலுவலர்களிடம், தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அவசர பணியில் பணியமர்த்தப்பட்டதாகவும், சீன டிராகன்களுக்கு எதிராக வேற்று கிரகவாசிகள் போரிட்டு வருவது குறித்து எச்சரிக்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜான்சன் முன்னதாகக் கைது செய்யப்பட்டு பிரேவார்ட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது மோட்டார் வாகனம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜான்சன் நுழைய முற்பட்ட விண்வெளி படை தளமான Patrick Space Force Base, ஸ்பேஸ் லாஞ்ச் டெல்டா 45இன் தாயகமாகத் திகழ்கிறது. இங்குதான், கிழக்கு ரேஞ்ச் ஏவுகணை மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தத் தளம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சுமார் 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜான்சனின் கைது குறித்து ஆன்லைனில் செய்தி வெளியானவுடன், இணைய பயனர்கள் ஏலியன், டிராகன் சண்டையைப் பற்றிய நகைச்சுவையான மீம்களை பகிர்ந்தனர்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கடந்த ஆண்டு புளோரிடாவில் ஒரு நபர் போலீஸ் காரை திருடி சாலையில் அப்படியே விட்டுவிட்டு, மற்றொரு போலீஸ் காரை திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்