Maldives Row: லட்சத்தீவு விவகாரத்தில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவு அதிபர் பேச்சு:
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஒயாமல் தான் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கான 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நாடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் இருந்தாலும், 900,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேகமான பொருளாதார மண்டலத்தை மாலத்தீவு கொண்டுள்து. இந்தப் பெருங்கடலின் பெரும் பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த (இந்திய) பெருங்கடல் அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசு. நாங்கள் அளவில் சிறியதாக இருக்கிறோம் என்ற பலவீனத்தை பயன்படுத்தி எங்களை மிரட்ட உங்களுக்கு அனுமதி இல்லை” என முகமது முய்சு பேசியுள்ளார். இந்தியா உடனான பிரச்னைக்கு மத்தியில் அவர் கூறியுள்ள கருத்து, முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
சீனாவிடம் கோரிக்கை:
முன்னதாக சீனாவில் பேசிய முகமது முய்சு, “சீனா எங்கள் சந்தையில் கொரோனாவிற்கு முன்பு முந்தைய முதலிடத்தில் இருந்தது. அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக மாலத்தீவிற்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - மாலத்தீவு பிரச்னை:
பிரதமர் மோடி அண்மையில் தான் லட்சத்தீவு சென்றது தொடர்பான புகப்படத்தை இணையத்தை வெளியிட்டு இருந்தார். இது மாலத்தீவிற்கு எதிரான பரப்புரை என அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்து வருகின்றனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்திவு சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.