ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவெடித்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கிய நிலையில், தற்போது வரை இரு நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது வரை நீடித்து வருகிறது.
அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என லட்சக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய ராணுவம் பின்னடைவை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், உக்ரைன் மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இச்சூழலில் உக்ரேனிய மகப்பேறு வார்டில் பச்சிளம் குழந்தை உள்பட மூன்று பேர் ரஷ்ய தாக்குதலில் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.
போர் தொடங்கியது முதல் கடந்த ஒன்பது மாதங்களாக உக்ரைனின் மருத்துவ கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் தெற்கு ஜபோரிஜியா பிராந்தியத்தின் ஒரு பகுதியான வில்னியன்ஸ்கில் உள்ள மருத்துவமனைக் கட்டடத்தில் ரஷ்ய ராக்கெட்டுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் இரண்டு மாடி கட்டடம் சிதிலமைடந்த நிலையில், பச்சிளம் குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தையின் தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவரது பச்சிளம் குழந்தை உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்த தன் கடும் கோபத்தை வெளிப்படுத்தி, முன்னதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
"கடந்த ஒன்பது மாதங்களாக சாதிக்க முடியாததை பயங்கரவாதம் மற்றும் கொலையுடன் சாதிக்க எதிரிப்படை மீண்டும் முடிவு செய்துள்ளது.
மாறாக நம் நாட்டுக்கு அவர்கள் கொண்டு வந்த அனைத்து தீமைகளும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் மரியுபோல் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.
ரஷ்யா இதுவரை உக்ரைனின் மருத்துவக் கட்டடங்களின் மீது 700க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.