ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை கடந்த நவம்பர் 13 அன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெல்போர்ன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரோவில் என்ற இடத்தில் ஆஸ்திரேலிய இந்தியக் கம்யூனிட்டி சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 12 அன்று, மகாத்மா காந்தியின் சிலையை ஆஸ்திரேலிய இந்தியக் கம்யூனிட்டி சென்டரில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கார் மாரிசன் திறந்து வைத்தார், இந்தச் சிலை இந்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு மகாத்மா காந்தி சிலை வழங்கப்பட்டு, ஆஸ்திரேலிய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய நாளிதழ்களிடம் பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலிய காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களால் சக்திவாய்ந்த ஆயுதம் கொண்டு காந்தியின் சிலை தாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். `ஆஸ்திரேலியா என்பது மிகவும் வெற்றிகரமான பன்முகக் கலாச்சாரமும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் வாழும் நாடு. இங்கு கலாச்சாரச் சின்னங்கள் மீதான தாக்குதல் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. இப்படியான அவமரியாதையைக் காண்பது அவமானகரமாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தச் செயலைச் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் ஆஸ்திரேலிய இந்தியச் சமூகத்திற்கு அவமரியாதை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் வெட்கம் கொள்ள வேண்டும்’ என்று ஸ்காட் மாரிசன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
விக்டோரியா இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சூர்ய பிரகாஷ் சோனி இதுகுறித்து பேசிய போது, இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், காந்தி அமைதி, அகிம்சை ஆகியவற்றின் சின்னம் என்றும் தன் வேதனையை வெளிப்படுத்தினார். `ஆஸ்திரேலிய மக்களுள் சிலரின் இப்படியான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு அதிர்ச்சிகரமாக இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா இந்தியா சமூகத் தொண்டு அறக்கட்டளையின் தலைவர் வாசன் ஸ்ரீனிவாசன், குற்றவாளிகள் சிலையின் தலையை வெட்டி எடுத்துப் போக முயன்றனர் என்றும், இப்படியொரு நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நிகழும் என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் வெளிநாடு ஒன்றில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டாம் நிகழ்வு இது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் டேவிஸ் நகரத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலை கவிழ்க்கப்பட்டிருந்தது. சிலையின் முகம் காணாமல் போனதோடு, கால்கள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தன.
இந்திய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ளதோடு, அமைதியின் சின்னத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.