இத்தாலியில் பச்சை போர்த்திய மலைகளுக்கு நடுவே, ஏரிகளுக்கு அருகே ஒரு அழகிய கிராமம் இருந்தது. கிராமத்தின் பெயர் குரோம். ஆஸ்திரியா- சுவிட்சர்லாந்து எல்லையில் இருந்த அந்த கிராமத்திற்கு அருகே இரண்டு பெரிய ஏரிகள். ஏரிகளை இணைத்து அணை கட்டி நீர் மின்நிலையம் அமைக்க அங்குள்ள அரசு முடிவு செய்தது. அதற்காக 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த குரோம் கிராமமே அழிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். சிலர் அப்பகுதிக்கு அருகிலேயே தங்கினர்.
ஒரு கிராமம் தண்ணீரில் மூழ்கடிக்கபட்டு ஒரு செயற்கையான 2.5 சதுர மைல் அளவுகொண்ட பெரிய ஏரியே அங்கு உருவாகிறது. இது ஹாலிவுட் படத்தில் எடுக்கப்பட்ட சிட்டிசன் மாதிரியான சினிமாக்கதை அல்ல. நிஜக்கதை.
இன்று குரோம் மிகப்பெரிய சுற்றுலாதலம். மலையில் நின்றுகொண்டு தண்ணீருக்கு நடுவில் இருக்கும் தேவாலயத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றனர் சுற்றுலாபயணிகள். அந்த தண்ணீருக்குள் ஒரு கிராமம் மூழ்கி கிடப்பதை 70 ஆண்டுகளில் யாருமே பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் 1950க்கு பிறகு அந்த இடம் ஏரி மட்டுமே. ஆனால் இப்போது அந்த கிராமத்தின் எச்சங்களை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நீர்தேக்கத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதற்காக குரோன் ஏரியில் இருந்த மொத்த நீரையும் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். தண்ணீர் வெளியேற வெளியேற உள்ளே மூழ்கிக்கிடந்த ஒரு கிராமமே கண்ணுக்கு தெரிகிறது. வீட்டின் சுவர்கள், படிக்கட்டுகள், மக்கள் வாழ்ந்த இடங்கள் என குரோம் கிராமத்தை இப்போதைய தலைமுறை ஒரு வித உணர்வோடு கண்டு ரசிக்கின்றனர். ஒரு காலத்தில் அங்குள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் இன்று முதியவர்களாக மீண்டும் அவர்களின் கிராமத்தைக் காண வருகிறார்கள்.
தண்ணீருக்குள் மூழ்கிய நினைவுகளையும், இடங்களையும் வாஞ்சையோடு தொட்டுப்பார்க்கின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிலரும், வற்றிய ஏரிக்குள் இருக்கும் கட்டிட இடிபாடுகளை பார்ப்பது ஒரு வித விசித்திரமான உணர்வை தருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிராமத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் குரோவில் கூட்டம் கூடுகிறது. தண்ணீர் ததும்பும் அழகான ஏரியை பார்க்கவே கூடிய சுற்றுலாப்பயணிகள் இன்று வறண்டு போன ஏரியையும், எஞ்சிக்கிடக்கும் குரோம் கிராமத்தையும் பார்க்க வருகிறார்கள்.
விரைவில் நீர்த்தேக்கத்தின் பழுது நீக்கப்பட்டு குரோம் ஏரியில் நீர் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை குரோம் கிராமத்தை சுற்றுலாபயணிகள் பார்க்கலாம். சினிமாவில் அத்திப்பட்டியை பார்த்த நமக்கே வியப்பு இருக்கும் போது, நேரில் பார்ப்பவர்களுக்கு இருக்காதா!
அண்டார்டிகாவில் இருந்து உடைபட்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. இனி என்னாகும்?