பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களுக்குள் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார்.


போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இரண்டாம் எலிசபெத் முன்னிலையில்,  செப்டம்பர் மாத தொடக்கத்தில் பிரிட்டனின் 15-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்று கொண்டார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ், புதிய அரசை அமைப்பதற்கு உரிமை கோரிய நிலையில், எலிசபெத் ராணி அவரின் கோரிக்கையை ஏற்று கொண்டிருந்தார். இவர் பதவியேற்ற மறுநாள் எலிசபெத் ராணி மரணம் அடைந்தார்.


இதுவரை பிரிட்டன் அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் யாரும் பதவி விலகியதில்லை.  இந்நிலையில், பிரிட்டனின் குறுகிய காலத்திற்கு பதவி வகித்த பிரதமராக லிஸ் டிரஸ் இருப்பார்.






டெளனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லிஸ் டிரஸ் பதவி விலகுவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.


கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை நான் பொறுப்பில் தொடர்வேன் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். 


லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மினி நிதியறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அதில் பல வரிச் சலுகைகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கன்சர்வேடிவ் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் அக்கட்சியினரிடையே குழப்பம் நிலவியது. 


இந்நிலையில்,  நிதியமைச்சராக இருந்த க்வாசி க்வாா்டெங், வரிக் குறைப்பு உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தைத் தொடா்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டை நியமித்தார். நேற்று இரண்டாவது அமைச்சராக சூவெல்லா பிரேவா்மனும் பதவி விலகினார்.


லிஸ் டிரஸின் பொருளாதார கொள்கையால் பாதிப்பு ஏற்படும் என்று கன்சர்வேடிவ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளது பிரிட்டன் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பிரிட்டன் வரலாற்றில் குறுகிய காலத்திற்கு பிரதமர் பொறுப்பு வகித்த இரண்டாவது நபர் லிஸ் டிரஸ். முன்னதாக, ஜார்ஜ் கானிங் (George Canning) 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 118 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்த காலத்தில் காசநோய் காரணமாக உயிரிழந்தார். தாராளமயத்தின் ஆதரவாளராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்ற ஆறு வாரங்களிலேயே பதவியைவிட்டு விலகியுள்ளார்.


பிரிட்டன் பிரதமர் தேர்வு செய்யப்படும் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷிசுனக் போட்டியிட்டார். இந்நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.