இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் புதிய பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் பதவிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகவும், மூன்றாவது பெண் பிரதமராகவும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தேர்வாகியுள்ளார். புதிய பிரதமரான லிஸ் ட்ரசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த நாட்டு வழக்கப்படி, ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமர் பொறுப்பை ஏற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு அதாவது இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷிசுனக், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இருவரும் போட்டியிட்டனர். புதிய கன்சர்வேட்டிவ் தலைவரைத் தேர்வு செய்வதற்காக 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தபால் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வாக்குகள் அளித்து வந்தனர்.




கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக்கை காட்டிலும், அவரை எதிர்த்து போட்டியிடும் லிஸ் ட்ரஸ்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று தகவல்கள் வெளியானது.


லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்றால், 2015ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நான்காவது பிரதமர் என்ற அந்தஸ்தை அவர் பெறுவார். லிஸ் டிரஸ் 1975ம் ஆண்டு பிறந்தவர். கன்சர்வேட்டிவ் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் லிஸ் ட்ரஸ், 2010ம் ஆண்டு முதல் தென்மேற்கு நார்ட்போக் பகுதியின் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார்.




கன்சர்வேட்டிவ் கட்சிக்காக பிரதமர் பொறுப்பை வகித்த டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரீஸ் ஜான்சன் ஆகியோரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். லிசா ட்ரஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் மெர்டூன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். 1996ம் ஆண்டு முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக அங்கம் வகித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் ட்ரஸ் பெற்றுள்ளார்.  வெற்றி பெற்ற லிஸ் ட்ரசுக்கு பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க : International Day of Charity 2022 : சர்வதேச தொண்டு தினம் இன்று ! வரலாறும் ! முக்கியத்துவமும்!


மேலும் படிக்க : Pakistan Flood : நாட்டையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம்.. பாகிஸ்தானில் 1300 பேர் உயிரிழப்பு.. 5 லட்சம் பேருக்கு இந்த கதி!!