ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குத்ரேஸ் நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருப்போம் என்று உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


இதனை ஒட்டி ஐ.நா.வில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அன்டோனியோ குத்ரேஸ், இந்த உலகில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான் அதிகம் பரவிக் கிடக்கும் மனித உரிமை மீறலாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது பெண் குழந்தை அதன் நெருங்கிய குடும்ப உறவாலோ அல்லது துணையாலோ கொல்லப்படுகிறார்.


பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்:


கொரோனா பெருந்தொற்று காலமானாலும் சரி, பொருளாதார தேக்கநிலை காலமாக இருந்தாலும் சரி பெண்கள் தான் அதிகளவிலான உடல் ரீதியான வன்முறை மற்றும் வார்த்தை ரீதியான வசவுகளுக்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்லாமல் பாலியல் வன்முறையாளர்களால் இணையத்திலும் பெண்களும், பெண் குழந்தைகளும் வன்முறை, பாலின வெறுப்பு ஏச்சுக்கள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக வன்முறைகள் என பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.


பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை, கடுஞ்சொற்கள், பாகுபாடு போன்றவற்றால் மனித குலத்தில் பாதி சமூகத்தின் மீது பெருந்துயராக தொடர்கிறது. அதன் விலை மிகவும் அதிகம். அது பெண்களை, பெண் குழந்தைகளை அவர்கள் வாழ்வை வாழ அனுமதி மறுக்கிறது. அடிப்படை உரிமையும், சுதந்திரமும் இன்றி பரிதவிக்கிறார்கள். பொருளாதார சமநிலை, நீடித்த நிலையான வளர்ச்சி கிட்டாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை வரலாற்று புத்தகக் கதையாக மாற்றி புது உலகம் படைப்போம். உலக நாடுகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் மகளிர் உரிமை அமைப்புகள், இயக்கங்களுக்கு ஒதுக்கும் நிதியை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண்கள் உரிமைக்காக உரக்க குரல் கொடுப்போம். பெருமிதத்தோடு நாம் அனைவருமே பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றிக் கொள்வோம்.


இவ்வாறு ஐ.நா பொதுச் செயலாளர் பேசியுள்ளார்.


நவம்பர் 25 வரலாறு:
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.


'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.


அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.