ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் (middle east airlines) பயணிகள் விமானம் புதன்கிழமை தரையிறங்கும் போது தோட்டாவால் தாக்கப்பட்டது. இதுவரை யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தோட்டா, வழக்கமாக அந்நகரில் கொண்டாட்டத்தின் போது வான் நோக்கி சுடும் போது தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
MEA தலைவர் மொஹமத் எல்-ஹவுட் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பெய்ரூட் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ஏழு முதல் எட்டு நிலையான விமானங்கள் தவறான தோட்டாக்களால் தாக்கப்படுகின்றன. இருப்பினும், புதன்கிழமை நடந்த சம்பவம் விமானம் நகரும் போது நிகழ்ந்த முதல் சம்பவமாகும்.
கொண்டாட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு லெபனான் புதியதல்ல. லெபனானில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருப்பது மிகவும் சாதாரண விஷயமாக உள்ளது. அங்கு அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் வெளியீடு போன்ற பொது நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பல சந்தர்ப்பங்களில், பட்டாசுகள் வெடிப்பது போல அங்கு துப்பாக்கிகள் சுடப்படுகின்றன.
இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த ஹவுட், "லெபனானில் வான்வெளியில் சுடும் இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்... இது விமான போக்குவரத்துக்கும் விமான நிலையத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும்" என்றார்.
லெபனான் மந்திரி Paula Yacoubian சம்பவம் நடக்கும் போது விமானத்தில் இருந்தார் மற்றும் தோட்டா விமானத்தை தாக்கிய பின்னர் விமானத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்தபோது தான் 2F இருக்கையில் அமர்ந்திருந்ததாக அவர் கூறினார். "கட்டுப்படுத்தப்படாத ஆயுதங்கள் மற்றும் தவறான தோட்டாக்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்." என அவர் பதிவிட்ட ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.