பொதுவாக, பல்வேறு விதமான படிப்புகள் இருக்கின்றன. அதில், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் தொடர்பான படிப்புகள் சவால் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் படிப்பது என்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு ஒரு மாணவர் கணிசமான அளவில் நேரத்தையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.


இப்படியிருக்க, ஸ்பெயினில் ஒரு மாணவர், தேர்வில் பார்த்து எழுதுவதற்காக தனது ஒட்டு மொத்த பாடத்தையும் 11 பேனாக்களின் மீது எழுதி தேர்வுக்கு கொண்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், பேனாக்களின் படங்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி இப்போது வைரலாகி வருகின்றன.


கேள்விக்கான பதிலை நீல நிற கேப் கொண்ட பேனாவில் சிறிய சிறிய எழுத்துகளாக பொறித்து அந்த மாணவர் எடுத்து வந்துள்ளார். இருப்பினும், அந்த மாணவர் பிடிக்கப்பட்டு, அவரின் பேனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த வாரம், யோலண்டா லூச்சி என்ற பேராசிரியர் அந்த 11 பேனாக்களின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பேனாக்கள் முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும், அருகில் சென்று பார்த்தபோதுதான் பேனாவின் கூட்டின் மேல் சிறிய சிறிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.


இதுகுறித்து கடந்த வாரம் லூச்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அலுவலகத்தை காலி செய்து கொண்டிருந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பல்கலைக்கழக பேனாவை கண்டறிந்தேன். பேனாவில் இப்படி ஒரு குற்ற நடைமுறை. என்ன ஒரு கலை" என பதிவிட்டுள்ளார்.


 






பகிரப்பட்டதிலிருந்து, இந்த பதிவு 3.8 லட்சம் விருப்பங்களையும் 24,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இந்த பேனாவை தயார் செய்த நேரத்தில், அவர் படித்திருக்கலாம் என சிலர் நெட்டிசன்கள் அந்த பதிவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், தங்களது நேர்ந்த சொந்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.