சவுதி அரேபிய இளவரசரான மொகமது பின் சல்மானின் சொத்து விவரங்களையும், அவரது சொகுசான வாழ்க்கை முறை குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.


சவுதி அரேபிய அரச குடும்பம்:


சவுதி அரேபியா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள எண்ணெய் வளங்களும்,  அதன் மூலம் அந்த நாட்டை ஆளும் அரச குடும்பத்திற்கு கிடைத்த வருவாயும் தான். சுமார் 15 ஆயிரம் குடும்ப உறுப்பினர்களை கொண்ட சவுதி அரேபிய அரசு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 16 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை விளக்கும் விதமாக தான் சவுதி அரேபிய அரச குடும்பத்தின் இளவரசரான மொகமது பின் சல்மானின் வாழ்க்கை முறை என்பது பலரையும் பிரமிக்கச் செய்யும் வகையில் உள்ளது. சுருக்கமாக எம்பிஎஸ் என அழைக்கப்படும் இவர் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகவும் உள்ளார். இந்நிலையில்  அவரின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பிரமாண்ட விலை கொண்ட பொருட்கள்:


 மொகமது பின் சல்மானின் பல்வேறு சொத்துகளில் முதலில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது, பிரான்சில் உள்ள சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.2,500 கோடி) மதிப்பிலான பிரமாண்ட அரண்மனை தான். லூவெசியன்ஸில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 57 அறைகள், உட்புற நீச்சல் குளம், திரையரங்கம் மற்றும் ஒரு பால்ரூம் என பல்வேறு வசதிகள் அடங்கியுள்ளன. அதோடு, கடந்த 2017ம் ஆண்டு லியோனார்டோ டா வின்சியின் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.3,700 கோடி) மதிப்பிலான சால்வேட்டர் முண்டி ஓவியத்தையும் ஏலத்தில் வாங்கினார். 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 4,100 கோடி மதிப்பிலான செரீன் எனும் சொகுசு படகு ஒன்றையும்  மொகமது பின் சல்மான் சொந்தமாக  பயன்படுத்தி வருகிறார்.


ரியல் எஸ்டேட்டில் அசத்தும் எம்பிஎஸ்:


அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  சொகுசு வசதிகளை கொண்ட பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்கியுள்ளார். அதில், உலகில் மிகவும் உயரமான குடியிருப்பு கட்டிடமான 432 பார்க் அவென்யூவில் உள்ள கட்டடத்திலும் வீடுகளை வாங்கியுள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். சவுதி அரேபியாவில் நியோம் எனும் ஒரு புதிய நகரத்தையே கட்டமைத்து வருகிறார். 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த நகரம், எதிர்கால தொழில்நுட்பம் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுலாதளத்திற்கான முகமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.


வாகன பிரியர்:


சொகுசு விடுகள் மட்டுமின்றி சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதிலும்  மொகமது பின் சல்மான் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதனை உணர்த்தும் விதமாக பல்வேறு ஹை-எண்ட் கார்கள் மற்றும் தனிநபர் பயன்பாடு ஜெட்களை தன்னகத்தே கொண்டுள்ளார். இதுதொடர்பான தகவலின் படி, உலகின் மிகவும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான புகாட்டி சிரோனை அவர் வாங்கியுள்ளார். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 420 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், சுமார் 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 2.4 விநாடிகளில் எட்டிவிடும். லம்போர்கினி அவென்டடோர், மெக்லாரன் பி1 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆகிய கார்களையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதோடு, 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 3,700 கோடி) மதிப்பிலான உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 மற்றும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 1,250 கோடி) மதிப்பிலான போயிங் 747 விமானத்தையும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதோடு, கடிகார பயன்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்ட மொகமது பின் சல்மான், பல்வேறு உயர் ரக கடிகாரங்களை பயன்படுத்தி வருகிறார். அதில்  31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.258 கோடி) மதிப்பிலான படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் (Patek Philippe Grandmaster Chime) கடிகாரமும் அடங்கும்.