மியான்மர் நாட்டில் ஜேட் கனிமத்தை பிரித்தெடுக்கும் சுரங்கங்கள் அங்கு செயல்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த நிலச்சரிவில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.  இந்த சம்பவம் நேற்றைய முன் தினம் நடந்துள்ளது.


2020 இல் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தொடர் கனமழைக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


அதிக லாபம் தரும் ஜேட் சுரங்கத் தொழில் பெரும்பாலும் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளது. இதில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், இது போன்ற கோர விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.


” ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சுமார் 25 பேர் காணாமல் போயுள்ளனர். இங்கு செல்வது கடினம் என்பதால் எங்களிடம் விரிவான பட்டியல் கிடைக்கவில்லை" என் மீட்புப் பணியாளர் ஒருவர் சம்பவ தொடர்பாக தெரிவித்துள்ளார். சுரங்க பணிகள் நடைபெற்ற நிலையில்,  சுமார் 150-180 மீட்டர் (500-600 அடி) உயரமுள்ள ஒரு பாரிய மண் குவியல் கடுமையான மழையால் தளர்ந்து சரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில பணியாளர்கள் ஜேட் சுரங்கப்பணிகளுக்காக திரும்பியுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இதுவரை எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒரு மீட்பு படை வீரர் கூறுகையில், இரண்டாவது முறை நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.


மழைக்காலத்தில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்றும் அங்கிருந்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளிகள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுகிறது.  ஜேட் மற்றும் மியான்மரின் வடக்கில் உள்ள மரங்கள், தங்கம் மற்றும் அம்பர் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் காச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நிதியளிக்க உதவியுள்ளன.