நெதர்லாந்தை சேர்ந்த 18 வயதே ஆன கார்பந்தய ஓட்டுனரான டிலானோ வாண்ட் ஹோஃப், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிலானோ வான்ட் ஹாஃப் பலி:
ஃபார்முலா 1 பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தின் வீடாக கருதப்படும் ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சனிக்கிழமை காலையில் நடந்த விபத்தில் டிலானோ வாண்ட் ஹோஃப் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா பிராந்திய ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பை அல்பைன் (FRECA) பந்தயத்தின் அமைப்பாளர்கள், 18 வயதான டிலானோ வான்ட் ஹாஃப் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சீறிப்பாய்ந்த கார் விபத்து:
விபத்து தொடர்பான வீடியோவில், பந்தயத்தில் ஈடுபட்டு இருந்த கார்கள் புயல் வேகத்தில் அதிகப்படியான சத்தத்துடன் சீறிப் பாய்ந்தன. மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் டிலானோ ஓட்டி வந்த ஆரஞ்சு நிற காருடன் மோதி கட்டுப்பாடை இழந்து ஓடுபாதையிலேயே தாறுமாறாக சுழன்றது. அதிகப்படியான பனிப்பொழிவால் எதிரே கார் நிற்பதை கூட காண முடியாமல், அதே பாதையில் வந்த மற்றொரு காரானது டிலானோவின் காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த டிலானோ உயிரிழந்துவிட்டதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஃபார்முலா கார் ஓட்டப்பந்தயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
யார் இந்த டிலன்:
நெதர்லாந்தைச் சேர்ந்த டிலானோ வான்ட் ஹாஃப், FRECA-ல் தனது இரண்டாவது முழு சீசன் பந்தயத்தில் பங்கேற்று இருந்தார். கடந்த 2022ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற FRECA பந்தயத்தில் முதன்முறையாக களமிறங்கிய டிலானோ அந்த போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு இரண்டு ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப்பில் பங்கேறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த டிலானோ, ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதே இடத்தில் நடந்த விபத்து:
லீஜுக்கு அருகிலுள்ள ஸ்டாவெலாட்டில் உள்ள ஸ்பா-ஃபிரான்கார்சாம்ப்ஸ் எனும் பகுதியில் தான் டிலனின் கார் விபத்து நிகழ்ந்துள்ளது. இதே இடத்தில் தான் கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற ஃபார்முலா 2 பந்தயத்தில் நிகழ்ந்த விபத்தில், பிரான்சை சேர்ந்த ஆந்தனி ஹூபர்ட் என்பவர் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை மீறி தடுப்புகளின் மீது மோதி நின்றிருந்த அவரது காரின் மீது, 217 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த மற்றொரு கார் மோதியதில் ஆந்தனி ஹூபர்ட்டின் கார் இரண்டு துண்டுகளாக உடைந்தது. படுகாயமடைந்த அவர் 90 நிமிட தீவிர சிகிச்சைக்குப் பிறகு, எதிர்பாராதவிதமாக பலியானார்.