வடகொரியா என்றாலே யாருக்கு சிம்மசொப்பனமோ இல்லையோ அமெரிக்காவுக்கு நிச்சயமாக சிம்மசொப்பனம் தான். அமெரிக்கா சொன்னாலும் சரி ஐ.நா. சொன்னாலும் சரி. இன்னும் யார் சொன்னாலும் சரி நாங்கள் ஏவுகணை சோதனையை, ராணுவத்தைப் பலப்படுத்துவதை நிறுத்த மாட்டோம் என்று பிடிவாதம் காட்டுவதால் வடகொரியா அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது.
மகளுடன் வடகொரியா அதிபர் :
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பற்றி பல்வேறு கதைகள் உண்டு. கட்டுக் கதைகளும் உண்டு. அதிபரின் வாழ்க்கையும் அத்தனை ரகசியமானது தான். ஆறு மாதங்களுக்கு முன்னர் கிம் ஜோங் உன் இறந்துவிட்டார் என்றுகூட தகவல்கள் வெளியாகின. அந்த அளவுக்கு அவர் ரகசியங்கள் நிறைந்தது.
அதிபர் கிம் ஜோங் உன்னின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று அவரது அடுத்த வாரிசு பற்றியதாகும். ஆம், இதுவரை குழந்தைகளின் புகைப்படட்த்தை வெளியில் பகிர்ந்திராத கிம் ஜோங் உன் முதன்முறையாக தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்பட ஏவுகணை தளத்தில் எடுக்கப்பட்டது. ஒய்யாரமாக நிற்கும் ஏவுகணை பின்னணியில் கம்பீரமாக நிற்கிறார் கிம் ஜோங் உன். கூடவே அவரது மகளும் நிற்கிறார். அவர் பெயர், வயது என வேறு எந்த விவரமும் இடம் பெறவில்லை. ஆனால் அவர் தான் கிம்மின் மகள் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரிசு:
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனக்குப் பின்னர் ஆட்சியை கட்டிக்காப்பது யார் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியிட்டதில்லை. இந்நிலையில் நாட்டின் மிக முக்கியமான ஏவுகணை சோதிக்கப்படுவதற்கு முன்னர் அந்த ஏவுகணை தளத்தில் கிம் தனது மகளுடன் தோன்றியிருப்பது வடகொரியாவுக்கும் உலகிற்கும் ஒரு சமிக்ஞை என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கிம்மின் தங்கை அவ்வப்போது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுப்பார். இந்நிலையில் கிம் குடும்பத்திலிருந்து அவருடைய வாரிசு வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அந்தச் சிறுமிக்கு 12 அல்லது 13 வயது தான் இருக்கும். இன்னும் 4 வருடங்களில் மேற்படிப்புக்குச் செல்லும் அவர் அதன் பின்னர் ராணுவத்தில் சேவை செய்வார் என்றும், அதன் பின்னர் அவர் தேவை ஏற்படும்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுவார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கணிக்கின்றன.
Hwasong-12 ஏவுகணை சோதனை:
உலகையே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவமாக இருப்பது, வடகொரியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான போர் பாதற்ற சூழல் தான். ஏற்கனவே பலமுறை உலக நாடுகள் உட்பட ஐ.நா சபை என பல தரப்பில் இருந்தும் எச்சரித்தும் அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாத வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
அதில் மிகவும் குறிப்பாக இந்த முறை அவ்வாறு நடந்த ஏவுகணை சோதனையானது, ஜப்பான் கடல் எல்லையில், பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இதனால் போர் பதற்ற சூழல் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருந்தாலும், அவை எல்லாம் ஜப்பான் கடல் எல்லையில் விழாது. இம்முறை ஜப்பான் கடல் எல்லையில் ஏவுகணை விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை என்பது ஜப்பானை கடந்து தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (04/10/2022) , வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட, ஒலியின் வேகத்தினை விட 17 மடங்கு வேகமாக பறந்து வந்த ஏவுகணை சுமார் 4,600 கிலோமீட்டர்கள் கடந்து வந்து, பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஜப்பான் தரப்பில், ஏவப்பட்ட ஏவுகணை Hwasong-12 ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.